'புகார் வாபஸ்..!' - ப.சிதம்பரம் வீட்டின் திருட்டு விவகாரத்தில் புலம்பும் போலீஸ் | Theft in P.Chidambaram house - fact or fiction?

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/07/2018)

கடைசி தொடர்பு:20:21 (09/07/2018)

'புகார் வாபஸ்..!' - ப.சிதம்பரம் வீட்டின் திருட்டு விவகாரத்தில் புலம்பும் போலீஸ்

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடுபோனதாகச் சென்னை ஆயிரம்விளக்கு போலீஸில் கடந்த 8-ம்தேதி காலை புகார் செய்யப்பட்டது. அன்று மாலையே போலீஸில் கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில், நகை-பணம் திருடு போனதா... இல்லையா என்ற கேள்விக்கு போலீஸ் தரப்பிலும் பதில் இல்லை; சிதம்பரம் தரப்பிலும் தகவல் இல்லை. ``இருதரப்பும் பேசி முடித்துக்கொண்டதாகத் தெரிவித்ததால், இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவைக்கிறோம்'' என்ற ரீதியில் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. 

சிதம்பரம் வீடு முன்பு போலீஸ்

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடுபோனதாகச் சென்னை ஆயிரம்விளக்கு போலீஸில் கடந்த 8-ம்தேதி காலை புகார் செய்யப்பட்டது. அன்று மாலையே போலீஸில் கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் அமைந்துள்ள வீட்டில் ப.சிதம்பரம், அவர் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசிக்கின்றனர். ப.சிதம்பரம் கட்சி அலுவல் பணியாக டெல்லியிலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியூரிலும் உள்ள நிலையில்தான் இந்தத் திருட்டு நடந்துள்ளதாகச் சொல்லப்பட்டது. ப.சிதம்பரம் வீட்டின் அலுவல் மேலாளர் முரளி, இதுகுறித்து ஆயிரம்விளக்கு போலீஸில் புகார் கொடுத்ததுமே இன்ஸ்பெக்டர் பாலன், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான போலீஸ் டீம், சிதம்பரம் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். முரளி கொடுத்திருந்த புகாரில், ``சிதம்பரம் வீட்டில் இருந்த பீரோவில்  தங்க நகைகள், தங்கக்காசு, 6 பட்டுப் புடவைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை திருடு போய்விட்டது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவைத் துணியால் மூடி மறைத்துள்ளனர்" என்றதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ப.சிதம்பரம்சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கி வீட்டு வேலை பார்க்கும் இரட்டையர் சகோதரிகளிடம் இதுதொடர்பாகப் போலீஸார்  விசாரணை நடத்தினர். மீண்டும், ``விசாரணைக்கு நாளை காலை ஸ்டேஷனுக்கு வரவேண்டும்'' என்று சொல்லி, பின்னர் அவர்களை  அனுப்பிவிட்டனராம். இந்நிலையில், போலீஸார் விசாரணைக்கு வரும்படி சொல்லியிருந்த சகோதரிகள், தங்கள் குடும்பத்தாருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது அவர்களைப் படம்பிடிக்கச் செய்தியாளர்கள் முயன்றபோது அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ``நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிதம்பரம் அய்யா வீட்டில் நம்பிக்கையுடன் வேலைபார்த்து வருகிறோம். எங்கள்மீது அபாண்டமாக இப்படியொரு பழியைப் போட்டுள்ளது யார் என்றே தெரியவில்லை. எங்களைப் படம் பிடித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம்" என்று கதறினர். போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர். முரளி கொடுத்திருந்த புகார்மீது விசாரணை நடத்துவோமா... வேண்டாமா என்ற குழப்பத்தில் போலீஸார் இருக்க... அடுத்த சில மணித்துளிகளில், கொடுத்த புகாரை முரளியே வாபஸ் பெற்றுவிட்டதாகவும், விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். சிதம்பரம் வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகத்தை மறைத்தபடி யாரோ ஒருவர் வீட்டின் அறைக்குள் செல்லும் காட்சிப் பதிவுகள் உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாயின. ``சிதம்பரம் வீட்டில் ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் அல்லது அறிமுக நபர்கள், வீட்டில் ஆட்கள் இல்லாததைப் பயன்படுத்தி கைவரிசை காட்ட முயன்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்து நகை, பணத்தை மீட்போம்'' என்று தொடக்கத்தில் போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் கொடுக்கப்பட்ட புகாரே வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 ``புகார் கொடுத்தவர் சமூகத்தில் சாதாரண நபர் என்றால், `நடவடிக்கை தேவையில்லை; நாங்கள் சமாதானமாகப் போகிறோம்; பேசித் தீர்த்துக் கொள்கிறோம்; கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்' என்று சொல்லிவிட்டுப் போக முடியாது. `பொய்ப் புகாரை ஏன் கொடுக்கிறீர்கள்' என்று கேட்டு, புகார் கொடுத்தவரைக் கண்டிப்பாக விசாரணைக்கு உட்படுத்துவோம். ப.சிதம்பரம் குடும்பம், சமூகத்தில் முக்கியமான குடும்பம் என்பதால், நாங்கள் இதுகுறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. புகார் கொடுப்பதற்கு முன்னரே, அவர்கள் யோசித்துவிட்டுக் கொடுத்திருக்கலாம்" என்று போலீஸார் புலம்புகின்றனர். ப.சிதம்பரம் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு எப்போதுமே இருந்து வருகிறது. கடந்த அக்டோபர், 2016-ல், ராஜகோபாலன் சுப்பராமன் என்ற பெயரில், ``ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதுதான் சிறந்த வழி'' என்று ட்விட்டரில் வந்த கொலை மிரட்டலால் அந்தப் பாதுகாப்பு இன்னும் அதிகமானது. வீட்டில் திருடுபோனதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. கடைசிவரையிலும், திருடு நடந்ததா... இல்லையா என்பதைச் சொல்லத்தான் யாரும் இல்லை.


டிரெண்டிங் @ விகடன்