'இது ஜோக் ஆயுக்தா!' - தமிழக அரசை விளாசும் அறப்போர் இயக்கம்

'சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா, ஒரு ஜோக் ஆயுக்தா' என அறப்போர் இயக்கம் விமர்சனம் செய்துள்ளது.

சட்டசபை

முதல்வர் முதல் அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் விசாரிக்கும் லோக் ஆயுக்தா மசோதாவை, மக்களிடம் கருத்து ஏதும் கேட்காமல், சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. இந்த மசோதாவை தாக்கல்செய்வதற்கு முன்பு, மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், அந்தக் கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இது, சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷன் கூறுகையில்,“அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா, ஒரு ஜோக் ஆயுக்தாஜெயராம் வெங்கடேஷன்தான். லோக் ஆயுக்தாவாக ஒரு நீதிபதி இருப்பார் என்றும், முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் லோக் ஆயுக்தாவைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக, மெஜாரிட்டியாக உள்ள ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், தேர்ந்தெடுப்பவர்கள்தான் லோக் ஆயுக்தா. ஆனாலும், லோக் ஆயுக்தாவைப் பணியமர்த்துவதற்கான காலக்கெடுவை இவர்கள் சொல்லவில்லை. எனவே, இவர்கள் எத்தனை நாள்களுக்கு வேண்டுமானாலும் பணியமர்த்தாமல் இருக்கலாம்.

அப்படியே லோக் ஆயுக்தாவைப் பணியமர்த்தினாலும், சுதந்திரமாக விசாரணை நடத்துவதற்கு, அவருக்கு அதிகாரம் இல்லை. மேலும், ஆரம்பகட்ட விசாரணையை விஜிலென்ஸ் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளனர். ஐ.ஏ.எஸ் முதல் க்ரூப் ஏ, பி, சி, டி அதிகாரிகளின்மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை விஜிலென்ஸ்தான் விசாரிக்கும். லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தாலும் அதை விசாரித்து, லோக் ஆயுக்தாவுக்கு அறிக்கை தாக்கல்செய்யப்போவது விஜிலென்ஸ்தான். விஜிலென்ஸ் கமிஷனராக இருப்பவர், தலைமைச் செயலாளருக்கு கீழ் வரக்கூடிய ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. அப்போது, அனைத்து குற்றச்சாட்டுகள்குறித்த விசாரணைகளையும், தலைமைச் செயலாளர் கன்ட்ரோலில் வைத்துக்கொள்ள முடியும்.

விஜிலென்ஸ் அறிக்கையில் ஊழலுக்கு முகாந்திரம் இருந்தால், லோக் ஆயுக்தா மேற்கொண்டு விசாரணை நடத்தும். அரசியல்வாதிகளுக்கு மட்டும் லோக் ஆயுக்தாவே ஆரம்பகட்டத்தில் இருந்து விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்குப்பதிவு செய்வதற்கான எந்த அதிகாரமும் லோக் ஆயுக்தாவில் இல்லை. இந்த அணியில், போலீஸ் அதிகாரி இருக்கிறாரா? என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. அப்படி, லோக் ஆயுக்தா ஊழலை முழுவதுமாக விசாரித்தாலும், அதை முதல்வரின் கையில்தான் வழங்க வேண்டும். மேலும், ஊழல் செய்தவர்களைத் தண்டிப்பதற்கான எந்தப் பிரிவும் இதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், புகார் தவறாக இருக்கும் பட்சத்தில், புகார்தாரருக்கு ஓராண்டு சிறையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மிரட்டியுள்ளனர்.  இதைவிட, ஒரு கேவலமான மசோதா இந்தியாவில் வேறு எங்கும் தாக்கல் செய்யப்படவில்லை. இது, கண்டிப்பாக கிழித்து எறியவேண்டி ஒரு மசோதா.

முதல்கட்ட விசாரணையை 60 நாள்களிலும், விரிவான விசாரணையை  ஆறு மாதங்களிலும் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால்,  ஆறு மாதம் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பதும், லோக் ஆயுக்தாவாக 25 ஆண்டுக்காலம் அனுபவம் உள்ள நீதிபதி பணியமர்த்தப்படுவார் என்ற இரண்டு அம்சங்கள் மட்டும் சற்று ஆறுதல் அளிக்கக்கூடியவை. இந்த மசோதா, ஊழலை மேலும் வலுப்படுத்தத்தான் உதவும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று கூறியுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!