நெல்லை-தாதர் விரைவு ரயில் மின்சார என்ஜின் மூலம் இன்று முதல் இயக்கம்! | nellai-dadar express train functions in electric engine from today

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:22:40 (09/07/2018)

நெல்லை-தாதர் விரைவு ரயில் மின்சார என்ஜின் மூலம் இன்று முதல் இயக்கம்!

நெல்லை-தாதர் இடையேயான சாளுக்கியா விரைவு ரயில், இன்று முதல் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டு பயணம் தொடங்கப்பட்டது.

சாளுக்கியா விரைவு ரயில் 

மும்பை தாதர்-எஸ்வந்த்பூர் (11022) இடையே கர்நாடக மக்கள் பயன்பெறும் வகையில் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை நெல்லை வரை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று, கடந்த 2012-ம் ஆண்டு முதல் நெல்லை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இது, நெல்லை-புனே இடையே டீசல் என்ஜினிலும் புனே-தாதர் இடையே மின்சார என்ஜினிலும் இயக்கப்பட்டுவந்தது. 

தமிழகத்தில், ரயில்வே பாதைகள் மின்மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவந்த சூழலில், திருச்சி-நெல்லை, ஈரோடு-திண்டுக்கல், ஈரோடு-திருச்சி, திருச்சி-தஞ்சாவூர், கரூர்-சேலம் ஆகிய வழித்தடங்களில்  மின்மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றது. இதில், திருச்சி-நெல்லை வழித்தடத்தில் தற்போது முக்கிய ரயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்பட்டு வருகின்றன. 

திருச்சி-தஞ்சாவூர் வழித்தடத்தில் மின்மயப் பணிகள் 4 மாதங்களுக்குள் முடிவடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஈரோடு-திருச்சி மார்க்கத்தில் மின்மயப் பணிகள் முடிவடைந்து, ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ஈரோடு-கரூர்-திண்டுக்கல் மார்க்கத்தில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த மே மாதம் நிறைவடைந்து போக்குவரத்து இயக்கச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனால், இந்த மார்க்கத்தில் சோதனை அடிப்படையில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுவந்தன. 

இந்த நிலையில், இன்று முதல் நெல்லை சந்திப்பு-தாதர் வரை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் முதன்முறையாக மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. இந்த என்ஜின், ஈரோடு ரயில் நிலையம் வரை இழுக்கும். அதைத் தொடர்ந்து டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு புனே வரை செல்லும். இதேபோல, கோவை-நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் மற்றும் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், நெல்லை-தாதர் வாராந்திர ரயில், நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரயில், நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில், ஜம்முதாவி விரைவு ரயில் ஆகிய ரயில்களும் இந்த மாதத்துக்குள் படிப்படியாக மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.