வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:22:16 (09/07/2018)

`கும்பகோணம் மார்க்கெட்டில் ஃபார்மலின் கலந்த 500 கிலோ மீன்கள் பறிமுதல்!’ - அதிகாரிகள் நடவடிக்கை

கும்பகோணத்தில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதை மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வின்போது கண்டுபிடித்தனர். இதில் ரசாயனம் கலந்த 500 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், இதுபோன்ற ரசாயனக் கலவை கலந்த மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர். ரசாயனம் கலக்கபட்ட மீன்கள் விற்பனை செய்யபட்டதால் அதிகாரிகள் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மீன்

தமிழகத்துக்கு ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் மீன்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனக் கலவைகள் கலக்கப்படுவதாக மீன்வளத் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மீன்வளத்துறை அலுவலகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனையகங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, கும்பகோணத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 500 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் சின்னக்கருப்பன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் மீன்களில் ஃபார்மலின் என்கிற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, குறிப்பாகப் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனக் கலவைகள் கலப்படுவதாகப் புகார் எழுந்தது. மீன்கள் நீண்ட நாள்கள் கெடாமல் இருப்பதற்காக ஐஸ் கட்டிகள் வழியாக மீன்கள் மீது இந்த ரசாயனம் செலுத்தப்படுகிறது. இந்த ரசாயனக் கலவை ஆராய்ச்சிக் கூடங்களில் உயிரினங்களைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவதாகும். இதன் மூலம் இரண்டு ஆண்டுகள் வரை கெடாமல் உயிரினங்களின் உடல்களைப் பாதுகாக்க முடியும். இந்த ரசாயனம் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.

இதை வெளிமாநில மீன் வியாபாரிகள் மீன்கள் கெடாமல் இருப்பதற்குப் பயன்படுத்துவதோடு விலையுயர்ந்த மீன்களில் இந்த ரசாயனக் கலவைகளைச் செலுத்தி, அதைத் தமிழகத்துக்கு விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர். மேலும் மீன்கள் விலைக் குறைவாக இருக்கும் நாள்களில் இந்த ரசாயனக் கலவையை கலந்து மீன்களை இருப்பு வைத்துக்கொண்டு, விலை அதிகம் உள்ள நாள்களில் அந்த மீன்களை விற்பனை செய்கின்றனர். இதை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பல நோய்கள் உருவாகும். எனவே, இதுகுறித்து புகார் வந்ததையடுத்து தற்போது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன்வளத்துறை சார்பில் ரசாயனம் கலந்த மீன்களைக் கண்டுபிடிப்பதற்காகத் திரவம் அனுப்பப்பட்டது. அதை மீன்கள்மீது செலுத்தி அதை ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தி ரசாயனம் செலுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீன்

தற்போது கும்பகோணத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 500 கிலோ வரை ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் அழுகிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு அதை நகராட்சி குப்பைக் கிடங்களில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனையகங்களில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்படும். ரசாயனம் கலந்த மீன்களை மீன் வியாபாரிகள் விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இந்த ஆய்வு நடந்துகொண்டிருக்கும்போதே பொது மக்கள் மீன்கள் வாங்குவதற்கு வந்தனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் பலர் நின்றனர். `கேட்கிற பணத்தைக் கொடுத்துதானே வாங்குகிறோம். ஒழுங்கான மீனை விற்றால் என்ன’ என நொந்துகொண்டு சென்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க