வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/07/2018)

கடைசி தொடர்பு:22:30 (09/07/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தடயங்கள் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

 

தூத்துக்குடியில், கடந்த மே-22-ல் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடைகள், உடலில் பாய்ந்த குண்டுகள் மற்றும் ஆய்வில் கண்டுபிடித்த பொருள்கள் ஆகிய தடயங்களை சி.பி.சி.ஐ.டி.,  போலீஸார் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த மே 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்தில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், அரசு வாகனங்கள்  மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும்  தீ வைத்து எரிக்கப்பட்டன. 

இச்சம்பவம்  உள்ளிட்ட 5 முக்கிய வழக்குகளை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., மாரிராஜா தலைமையில் 10 டி.எஸ்.பி-க்கள், தடய அறிவியல் துறை நிபுணர்கள், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ஆகியோர் உள்ளடக்கிய 60 பேர் கொண்ட குழு மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் 40 பேர் என மொத்தம் 100 பேர், கடந்த ஜுன் 23-ம் தேதி தூத்துக்குடிக்கு வந்தனர்.

சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் 10 பிரிவுகளாகப் பிரிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, இந்திய உணவுக் கழக அலுவலகம், அண்ணா நகர் மெயின் ரோடு பகுதி, திரேஸ்புரம்,  அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளுடன் வெடிகுண்டு, தடய அறிவியல் நிபுணர்களும் 5 நாள்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் ரத்தக்கறை படிந்த உடைகள், அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள், ஆய்வில்  கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் ஒப்படைக்க, கடந்த 6-ம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீஸார் வந்தனர். ஆனால், நீதிமன்றத் தலைமை எழுத்தர் அன்று இல்லாததால், மீண்டும் போலீஸார் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று (9.7.18),  தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி., ஆய்வாளர் உலகராணி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் போலீஸார்,  நீதிமன்றத்துக்கு உடைகள் மற்றும் தோட்டக்கள் ஆகியவை அடங்கிய அட்டைப் பெட்டிகளை எடுத்துவந்தனர். அவற்றை நீதிபதி சங்கர் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க