வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (09/07/2018)

லஞ்சப் பணத்துடன் கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த கிராம மக்கள்!

லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலரைக் கண்டித்து, லஞ்சப் பணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த கிராம மக்களால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம மக்கள்

பண்ருட்டி அருகே உள்ள நடுவீரப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் நாகராஜ். இவர், கிராம மக்களிடம் இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை, ஜாதிச் சான்று  என சான்றுகள் வழங்குவதற்காக லஞ்சம் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கிராமத்தில் உள்ள ஏழை, எளிய கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்கிறார்கள்.

இதையடுத்து, நடுவீரப்பட்டு கிராம மக்கள் ஒவ்வொருவரும் லஞ்சப் பணத்துடன் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார்,  அதற்கு அனுமதி மறுத்தனர். அதையடுத்து,  துணை ஆட்சியர் அலுவலகம் சென்ற கிராம மக்கள், மனுவை மட்டும் கொடுத்துவிட்டு கலைந்துசென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு லஞ்சப் பணத்துடன் பொது மக்கள் மனுக்கொடுக்க வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.