வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (09/07/2018)

கடைசி தொடர்பு:23:30 (09/07/2018)

`பயந்துகிட்டே ஸ்கூலுக்குப் போக வேண்டி இருக்கு!’ - டாஸ்மாக் கடைக்கு எதிராகக் கொந்தளித்த மாணவர்கள்

ஊரணிபுரத்தில் புதிதாக திறக்கபட்ட 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் மர்றும் அதிகாரிகள் ஒரு வாரத்தில் கடைகள் அகற்றப்படும்; அதுவரை இந்த வழியாகச் செல்லும் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

தஞ்சை மாவட்டம்  ஊரணிபுரத்தில் சுமார் 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச் சுற்றி பல கிராமங்கள் உள்ளது அவற்றின் முக்கிய மைய பகுதியாக ஊரணிபுரம் திகழ்ந்து வருகிறது. இந்தப் பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு  வந்தன. நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து  ஊரணிபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த 3 டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டு விட்டன.

இந்தநிலையில், எந்த முன்னறிவிப்புமின்றி  ஊரணிபுரம் கல்லணை கால்வாய் பகுதியில் புதிதாக 2 டாஸ்மாக் மதுபானக் கடைகள்  கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டன. ஏற்கெனவே, `எங்க பகுதிக்கு டாஸ்மாக் வேண்டாம்’ என நீதிமன்றம் வரை சென்று போராடியிருந்தனர் இப்பகுதி மக்கள். ஆனால் அறிவிக்கபடாமல் திறக்கபட்ட டாஸ்மாக் கடையால், மேல ஊரணிபுரம், சிவ விடுதி, உஞ்சை விடுதி, வெள்ளத்தேவன் விடுதி போன்ற இன்னும் பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஊரணிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவ,மானவிகள் இந்த டாஸ்மாக் கடையைக் கடந்துதான் செல்ல வேண்டும். கடை திறக்கபட்டு சில தினங்களே ஆனாலும் மாணவ,மானவிகளும் அப்பகுதி மக்களும் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகினர்.

இதனால், அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் மற்றும் பள்ளி மாணவர்கள் கல்லணை கால்வாய் பெரியாற்று பாலத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை எடுக்க வேண்டும் என  திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பள்ளி சீருடையுடன் வந்து மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராகவும்,உடனடியாக கடையை மூடக்கோரியும் கையில் டாஸ்மாக்கிற்கு எதிரான பதாகைகளைப் பிடித்தவாறு கோஷமிட்டனர். 

இந்த மறியல் போராட்டத்தால்  கந்தர்வக் கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து  தஞ்சாவூர் எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள் என பலர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 டாஸ்மாக் கடைகளையும்  அகற்றினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என உறுதியாக மக்கள் கூறினார்கள். அப்போது பள்ளி மாணவி ஒருவர், ``எங்க பள்ளியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறோம். அதில் பாதி பேர் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். கடந்த ஒரு வருஷமாக எங்க பகுதியில் டாஸ்மாக் கடை இல்லாமல் நிம்மதியாக இருந்தோம். இப்ப நாங்க போற வழியிலேயே  கடையை திறந்து விட்டார்கள். இப்பதான் திறந்து இருக்கிறார்கள் என்றாலும், மதுவைக் குடித்து விட்டு நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். நாங்க பள்ளிக்கு போகும் போது குடிச்சுகிட்டு இருக்கிறவங்களப் பார்த்து பயந்துகிட்டே போகணும். இதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், `இன்னும் ஒருவார காலத்தில் 2 டாஸ்மாக் கடைகளும் அப்புறப்படுத்தப்படும். அதுவரை இந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்தனர். இதனை  ஏற்று கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள்  மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க