சங்கரநாராயணசாமி கோயில் ஆடித்தபசு திருவிழா: நெல்லை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!

சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவுக்காக நெல்லை மாவட்டம் முழுவதும் வரும் 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
 

சங்கரன்கோவில் ஆடித்தபசு

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சாமி கோயிலின் ஆடித்தபசு திருவிழா வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவையொட்டி 27-ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார். 

கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவகையில் இருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார். அத்துடன், இந்த விடுமுறைக்குப் பதிலாக ஆகஸ்ட் 11-ம் தேதி வேலை நாள் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனிடையே, சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறுகையில், ’’வரும் 17-ம் தேதி தொடங்கும் சங்கரநாராயண சாமி கோயில் ஆடித்தபசு திருவிழா, வரும் 28-ம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள், வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 27-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது. 

அதனால் ரதவீதிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். தபசு நடைபெறுவதை பக்தர்கள் கண்டு களித்திடும் வகையில் பெரிய எல்இடி திரையினை கோவில் நிர்வாகத்தின் சார்பில் அமைத்திட வேண்டும். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் ஆண்டுதோறும் வருகை தருவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட வசதிகளை சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் செய்திட வேண்டும். பொதுமக்கள் திருவிழாவிற்கு வந்து செல்ல வசதியாக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!