`20 ஆண்டு பணியில் நோ ஆப்சென்ட்; நோ விபத்து!’ - ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநருக்குக் குவியும் பாராட்டு

தஞ்சாவூரில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகப் பணிபுரிந்த 20 ஆண்டுகளில் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமலும் எந்த விபத்தும் ஏற்படுத்தாமலும் பணியாற்றி ஒய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரை சக பணியாளர்கள், அதிகாரிகள் எனப் பலர் பாராட்டுவதோடு வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

மாணிக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1998-ம் ஆண்டு டிரைவராகப் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து 20 ஆண்டுக்காலம் தஞ்சாவூர் நகரக் கிளை 2-ல் பணியாற்றி, கடந்த 30-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் பணி புரிந்த காலத்தில் சிறு விபத்துகூட ஏற்படுத்தியது இல்லை. அதோடு ஒரு நாள்கூட வேலைக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது இல்லை. அதேபோல், போக்குவரத்துக் கழகம் நிர்ணயம் செய்த டீசல் சிக்கனத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்ததோடு, அரசுக்கு அதிக லாபமும் பெற்றுத் தந்தவர். இதனால் போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் பாராட்டையும் பெற்று சிறப்பாகப் பணியாற்றினார்.

இவர், சில தினங்களுக்கு முன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரை அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள், `மாணிக்கம் போல் எல்லோரும் பணியில் இருந்துவிட்டால் போதும். யாராலும் போக்குவரத்துத் துறையை அசைக்க முடியாது’ எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இதேபோல்  ஊழியர்கள், ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் எனப் பலரும் பாராட்டு விழாவை நடத்தி வருகின்றனர். அந்தச் சமயங்களில் இவர் டிரைவராக மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக நடந்த போராட்டங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சமூகத்தின்மீது அவருக்கு இருந்த அக்கறையையும் காட்டியது எனப் பாராட்டு விழாவில் இவரைப் பற்றிப் பேசினர்.

மாணிக்கத்துக்குப் பாராட்டு விழா

இது குறித்து மாணிக்கத்திடம் பேசினோம், ``நாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்றால், நம்ம வீட்டு சூழல் ரொம்ப முக்கியம். அந்த வகையில் என் மனைவி எனது இந்த உழைப்புக்கு முதல் காரணம். அதன் பிறகு சக ஊழியர்கள். `என்னடா இவன், ஒரு நாள்கூட லீவ் எடுக்க மாட்டேன்கிறான். இவருதான் இந்த துறையைத் தூக்கி நிறுத்தப்போறாரா’ என யாரும் கிண்டல் பண்ணாமல் உற்சாகப்படுத்தினார்கள். அதனால்தான் என்னால் லீவே எடுக்காமல் பணிக்குச் செல்ல முடிந்தது. இந்தப் பணியில் விபத்துகள் நடப்பது இயல்பான ஒன்று, அதேநேரம் வண்டி ஓட்டும்போது முழு கவனத்துடன் இருந்தால்போதும், விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பே இருக்காது. மேலும், டிரைவர்கள் உடலையும் மனைதையும் நல்ல ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசும் அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!