வெளியிடப்பட்ட நேரம்: 22:44 (09/07/2018)

கடைசி தொடர்பு:08:05 (10/07/2018)

`ஊழலை ஒழிப்போம்; ஆட்சியைப் பிடிப்போம்!’ - சென்னையில் அமித் ஷா முழக்கம்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் ஊழலை ஒழிப்போம்; ஆட்சியைப் பிடிப்போம்’ என்று பேசினார்.

அமித் ஷா

2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை அவர் சென்னை வந்தார். அவரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை, மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தின் 5-ம் எண் கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் ஏறி, அங்கு கூடியிருந்த பா.ஜ.க-வினரின் வரவேற்பை அவர் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் கார் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வி.ஜி.பி தங்கக் கடற்கரை வளாகத்துக்குச் சென்றார். அங்கு நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்டப் பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களிடம், நாடாளுமன்றத் தேர்தலுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர், தமிழக இந்து முன்னணி, சங் பரிவார் ஆகிய அமைப்புகளின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 

நாடாளுமன்றத் தேர்தலின் பா.ஜ.க-வின் வாக்குச் சாவடிகளின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார். அவர் பேசுகையில், ``தமிழகத்தில் பா.ஜ.க வலுவடைந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான ஆதரவை மோடிக்கு தந்தீர்கள். உங்கள் ஆதரவால் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் மோடி இடம்கொடுத்தார். தமிழகத்துக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் மூலம் அவர் கொண்டு வந்துகொண்டிருக்கிறார். `விருந்தினர்களை வரவேற்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு’ என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். தமிழ் மக்களும் எல்லோரையும் வரவேற்று நலம் விசாரிப்பதில் முன்னோடியாக இருக்கிறீர்கள். எனக்கு இன்று மகத்தான வரவேற்பை அளித்தீர்கள். உங்களுக்கு சிரம் தாழ்த்தி எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மோடிக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் உங்களை நான் வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 70 ஆண்டுகளில் இருந்த அரசாங்கங்கள் செய்ய முடியாததை எல்லாம் இந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.க தமிழகத்துக்கு செய்திருக்கிறது. நாடு முழுவதும் சாதி, மதம், வாரிசு அரசியலுக்கு பா.ஜ.க முடிவு கட்டியுள்ளது. ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம்  அனுபவித்து வருகின்றனர். பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு  ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது.  

சென்னை

எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்” என்றார்.