கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றத் தடை..! கொந்தளிக்கும் ஆன்மிகவாதிகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களான கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில் ஆகியவைகளில் பக்தர்கள் நேரடியாக விளக்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இந்தத் தடை உத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆன்மிகவாதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, கும்பகோணத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளித்தனர்.

இக்கோயில்களில் வைக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புப் பலகையில் ஜூலை 1-ம் தேதியிலிருந்து இந்தத் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதற்கு ஆன்மிகவாதிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தங்களது வழிபாட்டு உரிமையில் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லாமல் தலையீடு செய்வதாக ஆதங்கப்படுகிறார்கள். மீண்டும் விளக்கேற்ற அனுமதி கோரி கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் ஒருங்கிணைப்பில் இன்று ஏராளமான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தன. இதுகுறித்து இதன் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகளிடம் பேசியபோது, ‘’கோயில்களில் பக்தர்கள் நேரடியாக தங்களது கைகளால் விளக்கேற்றுவதென்பது, பல ஆயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள வழிபாட்டு உரிமையாகும். ஏற்கெனவே சூடம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கேற்றுவது மூலமாக மட்டுமே பக்தர்கள் தங்களது கைகளால் நேரடியாக கடவுளுக்கு பிரார்த்தனை செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. தற்பொழுது இதுவும் மறுக்கப்படுவது பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயலாகும். பொதுமக்கள் பரிகாரம் மற்றும் வேண்டுதல்கள் ஆகியவைகளுக்கு தங்களது கைகளால் அகல் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவதென்பது தவிர்க்க முடியாததாகும். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களது விருப்பத்துக்கேற்ப மனம் போன போக்கில், விளக்கேற்றும் வழக்கத்துக்குத் தடை விதிக்க முடியாது.

ஆலயங்களில் விளக்கேற்றுவதென்பது ஆன்மிக நம்பிக்கைகளில் மிகவும் பிரதானமானது. தேவாரம், பெரியபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களில் இதற்கென சிறப்பு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. கோயில்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும், பாலீத்தின் கலந்த நெய் மற்றும் எண்ணெய் போன்றவைகள் கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே தமிழ்நாடு முழுவதும் இந்த தடை விதிக்கப்படுவதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இது ஏற்புடையதல்ல. பெரிய தட்டுகளில் வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கில்தான் பக்தர்கள் விளக்கேற்றுகிறார்கள். சுவர்களில் கறை ஏற்படாமல் தடுக்க மக்களுக்கு விழிப்பு உணர்வு அளிப்பதோடு, ஊழியர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் நெய், எண்ணெய் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து கலப்படத்தைத் தடுக்க வேண்டும். இதுதான் சரியான தீர்வாக இருக்கும். அணையா விளக்கு என்ற பெயரில் கண்ணாடி பேழைக்குள் இந்துச் சமய அறநிலையத்துறையினர் வைத்துள்ள விளக்கில் நெய், எண்ணெய் ஊற்றுவதற்கு மட்டுமே அனுமதிப்போம் என சொல்வது மிகவும் அபத்தமானது. விளக்கேற்ற அனுமதி கோரி நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!