பெண்ணை வீட்டுக்குள் கட்டி வைத்து நகைக் கொள்ளை..! திருவாரூரில் பரபரப்பு

கடந்த சில மாதங்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நகைக் கொள்ளை கும்பல்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருந்த நிலையில், நேற்று திருவாரூரில் ஒரு பெண்ணை வீட்டுக்குள் கட்டி வைத்து நகை உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையடிக்கும் கும்பல்களின் நடமாட்டம் தற்பொழுது அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, ஏராளமான நகைக் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின.  

திருட்டு

இந்நிலையில், நேற்று பட்டப்பகலில், திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்த லட்சுமி என்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 20 சவரன் நகை, செல்போன், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்து, கை கால்களைக் கட்டிப்போட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்தக் கொள்ளை கும்பல் ஒரு காரில் வந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இவர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் எனச் சந்தேகப்படுகிறார்கள். காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும், காலதாமதமானால், இந்தக் கொள்ளைக் கும்பலால் இன்னும் பல அசம்பாதவித சம்பவங்கள் நிகழ்வதோடு பொதுமக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!