கிராமத்துப் பெண்ணுக்கு ரேஷன் கடை ஊழியர் பாலியல் தொந்தரவு..! களத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட்

சிவகங்கை அருகே படமாத்தூர் ரேஷன் கடை விற்பனையாளர் பட்டியலின பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த புகார் குறித்து சி.பி.எம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசும்போது, 'சிவகங்கை அருகே கல்லூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், படமாத்தூரில் ரேஷன் கடை நடத்தி வருகிறது. அதில் விற்பனையாளராக பிச்சை என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் ரேஷன் பொருள்கள் வாங்க வரும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு செய்து பல்வேறு ஊர்களில் பிரச்னையோடுதான் இங்கே வந்திருக்கிறார்.

மதுரையிலிருந்து படமாத்தூருக்கு திருமணமாகி வந்திருக்கிறார் பட்டியலின பெண்மணி ஒருவர். இவர் தன்னுடைய கணவருடைய குடும்ப அட்டையில் தனது பெயரையும் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதன் பிறகு குடும்ப அட்டையை எடுத்துக்கொண்டு போய் பிச்சையிடம் கேட்டதற்கு மூன்று நாள் கழித்து வரச்சொல்லியிருக்கிறார். மூன்று நாள் கழித்து சென்றபோது மாலை மூன்று மணிக்கு மேல் வரச்சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்ன நேரத்துக்குச் சென்றபோது ரேஷன் கடைக்குள் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும் சத்தம் போட்டு வெளியே வந்து விட்டார் அந்தப் பெண்மணி. நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் சொல்ல, கிராம மக்கள் திரண்டு போய் சத்தம் போட்டிருக்கிறார்கள். வேலைக்குப் போய்விட்டு வந்த கணவர் கண்ணனிடம் நடந்த விஷயத்தை மனைவி சொன்னதும் துடிதுடித்துப் போய் பிச்சையிடம் கேட்டிருக்கிறார். அதற்குப் பிச்சை கண்ணனை சாதியின் பெயரை இழிவாக பேசி திட்டி கடைக்குள் வைத்திருந்த கத்தியால் குத்த வந்துள்ளார். எனவே, இந்தக் காமக் கொடூரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கூட்டுறவுத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!