வெளியிடப்பட்ட நேரம்: 04:49 (10/07/2018)

கடைசி தொடர்பு:04:49 (10/07/2018)

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை!

மழை

மிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும், தலைநகர் சென்னையில் சில நாட்களாகவே வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. வெயில் தாக்கமும் வெகுவாகக் குறைந்திருந்தது. இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. எதிர்பாராத விதமாக நேற்று மாலை முதலே சென்னையில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. காற்றும், சாரலும் சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருந்தும் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றிருந்தனர். மழை குறைந்ததும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி, கிண்டி, தி.நகர், வடபழனி, அண்ணா நகர், முகப்பேர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலைகளிலும் நீர் தேங்கியது. சென்னை - புதுச்சேரி கடலோரப் பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கையில் எச்சரிக்கையாக இருக்கும்படி ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது.