`விடுமுறை நாள்களில் எரியும் பள்ளிக்கூடம்!' - சூலூரை மிரட்டும் மர்மம்

பள்ளி மாணவர்கள்

கோவையை அடுத்துள்ள சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் கடந்த சில வாரங்களில் மர்மமான முறையில் திடீர் திடீரென தீப்பற்றுவதாக கிளம்பியிருக்கும் புகார் கேட்பவர்களையெல்லாம் அதிரச் செய்திருக்கிறது. 

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டுவரும் சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்தான் இந்த விசித்திரப் புகார். கடந்த மூன்று வாரங்களாக இந்தப் பள்ளியில் விடுமுறை நாட்களன்று தீப்பற்றி எரிகிறதாம். இப்படி மர்மமான முறையில் பரவும் தீயால் பள்ளியில் உள்ள பொருள்களெல்லாம் எரிந்து நாசமாகிவிட்டதாக அந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் கதறுகிறார்கள். இதுதொடர்பாக சூலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை.  நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்திருக்கிறது போலீஸ். 

தீ சம்பவம் அணையாமல் ஒவ்வொரு வாரமும் தொடரவே, பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பள்ளி மாணவர்கள் தங்களது  பெற்றோருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகவே மனு கொடுக்க வந்துவிட்டார்கள். அவர்களிடம் பேசியபோது, 'பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைங்கள அனுப்புறதுக்கே பயமா இருக்குங்க. மூணு வாரமா இந்த அசம்பாவிதம் நடந்துட்டு இருக்கு. அதுவும் லீவ் நாள்லதான் இது நடக்குது. யாரோதான் வேணும்னே இப்படி பண்றாங்க. யார்னு எங்களால கண்டுபிடிக்க முடியல. வெளில சொன்னா யாராச்சும் பள்ளிக்கூடத்துக்கு தீ வைப்பாங்களான்னும் கேக்குறாங்க. ஏதோ எங்கயோ தப்பு நடக்குது. அதை கண்டுபிடிக்க வேண்டிய போலீஸும் கண்டுக்காம இருக்காங்க. அரசு பள்ளிங்கிறதாலதானே இப்டி அசால்ட்டா இருக்காங்க. இந்த சம்பவத்தில் பள்ளியில உள்ள பொருள்களெல்லாம் எரிஞ்சு நாசமா போச்சு. கலெக்டர்தான் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து எங்க பள்ளிக்கூடத்தைக் காப்பாற்றணும்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!