வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (10/07/2018)

கடைசி தொடர்பு:07:40 (10/07/2018)

மரண தண்டனைக்கு எதிரான தஷ்வந்த் மேல்முறையீடு.. உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தஷ்வந்த்

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த 2017 பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து அவர்மீது பல நடவடிக்கைகள் பாய்ந்தது. தனது தாயைக் கொன்றதாக குற்றச்சாட்டு, தலைமறைவு, போலீஸாரிடம் இருந்து தப்பித்தது என பல திருப்பங்கள் தஷ்வந்த்தைச் சுற்றி அரங்கேறியது. இறுதியாக போலீஸிடம் சிக்கிய அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, சிறுமி ஹாசினி கொலை வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்குத்தண்டனை அளித்து கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மொத்தம் 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 15 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. 

விடுமுறை நாள்களிலும் ஹாசினி வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மொத்தம் 35 சாட்சிகளிடம் தீவிர விசாரணை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த மரண தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. நீதிபதிகள் ராமதிலகம் மற்றும் விமலா தீர்ப்பளிக்க உள்ளனர்.