வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (10/07/2018)

கடைசி தொடர்பு:12:09 (10/07/2018)

பொய்யாமணி பள்ளியில் நாப்கின் எரியூட்டி இயந்திரம்... மாணவிகள் நிம்மதி..!

பெண்கள் எவ்வளவோ உச்சத்தைத் தொட்டுவிட்டார்கள். இந்த விஷயத்துக்காக அவர்களை வீட்டிலேயே முடக்கிவிடக் கூடாது. அவர்கள் வானத்தை நோக்கிச் சிறகு விரித்துப் பறந்து செல்ல, இந்த விஷயம் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னையை கிராமத்தில் இன்னும்கூட தீட்டாகவே கருதுகிறார்கள். அந்தப் பெண்களை, வீட்டைவிட்டு தனியே தங்கவைக்கும் கொடுமை இந்த நவீன யுகத்திலும் நடக்கிறது.

கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் வசிக்கும் கிராமங்களில், ஊருக்கு வெளியே ஒரு கொட்டகை அமைத்து, அதில் மாதவிடாய் வந்த பெண்களை மூன்று நாள் தங்கவைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதே கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் சங்கடம் தீர்க்க, பள்ளியில் நாப்கின் எரியூட்டி இயந்திரத்தை வைத்து பாராட்டு பெற்றிருக்கிறார் ஆசிரியர் ஒருவர்.

அரசுப் பள்ளியில் நாப்கின் எரியூட்டி இயந்திரம்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிகிறார் பூபதி. பள்ளியில் இயற்கைத் தோட்டம் தொடங்கி ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் வசதி, ஏ.சி. கணினி ஆய்வகம், ஏ.சி வகுப்பறை வரை அனைத்து வசதிகளையும் உருவாக்கியுள்ளார். மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் நவீன கழிவறை வசதிகளை அமைத்திருப்பதோடு, அந்தக் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பள்ளி வளாகம் முழுக்க உள்ள இயற்கைக் காய்கறித் தோட்டங்களுக்குப் பயன்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறார்.

அரசுப் பள்ளி

மேலும், அரசுப் பள்ளிகளின் ஆசிரியர் பூபதிதரத்தை லோக்கல் சேனலில் தொடர்ச்சியாக விளம்பரம் செய்து, இந்த அரசுப் பள்ளியில் கூடுதலாக 40 மாணவர்களை இந்த வருடம் தன்னிச்சையாக சேரவைத்து அசத்தியிருக்கிறார். இதனால், இந்தப் பள்ளிக்கு சமீபத்தில் ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழும் கிடைத்துள்ளது.

இங்கு உள்ள பள்ளி மாணவிகளின் சங்கடம் தீர்க்க, அரசுப் பள்ளி வளாகத்தில் நாப்கின் எரியூட்டி இயந்திரத்தை வைத்துள்ளார் ஆசிரியர் பூபதி.

``இங்கு உள்ள மக்கள் அனைவரும், ஏழ்மையானவர்கள்; படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள். தங்கள் கஷ்டம் தங்களோடு போகட்டும், பிள்ளைகளாவது நன்கு படிக்க வேண்டும் என எண்ணுபவர்கள். அதனால்தான் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையிலும் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய்ப் பிரச்னை ஏற்பட்டால், அதை ஏதோ தீட்டாகக் கருதி மூன்று நாள்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை.

தேர்வு காலங்களில்கூட மாணவிகளை இப்படி வீட்டில் பூட்டிவைக்கும் போக்கு இருந்தது. இதனால், பல மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியானது. மாதவிடாய் வந்த மாணவிகளை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியே படுக்கவைக்கும் அவலமும் நடந்தது. இதனால், பெண்கள் நாப்கின் பயன்படுத்துவது பற்றி இங்குள்ள ஆசிரியைகளின் உதவியோடு பெற்றோர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினோம்.

அரசுப் பள்ளி

`மாதவிடாய் வந்த பெண்களை, தீட்டுபட்டவர்களாக ஒதுக்கிவைப்பது காலம்காலமாக நடப்பதுதான். மூன்று நாள்கள் முடிந்ததும் அவர்கள் குளித்துவிட்டு தாங்கள் படுத்திருந்த இடத்தையும் கழுவிவிட்டு, உடுத்திய ஆடைகளை நன்றாகத் துவைத்துவிட்டுதான் வீட்டுக்குள் வருவார்கள். இருந்தாலும், காலம் மாறிவிட்டது. அது உடலில் நிகழும் தொடர் பிரச்னை. அதற்காக, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மூன்று நாளும் தள்ளிவைப்பது தவறு. நாப்கின் பயன்படுத்தச் சொல்லி, பள்ளிக்கு அனுப்புங்கள்' என ஆசிரியைகள் மாணவிகளின் பெற்றோர்களிடம் விளக்கினார்கள்.

நாப்கின் எரியூட்டி இயந்திரம்பெண்கள் எவ்வளவோ உச்சத்தைத் தொட்டுவிட்டார்கள். இந்த விஷயத்துக்காக அவர்களை வீட்டிலேயே முடக்கிவிடக் கூடாது. அவர்கள் வானத்தை நோக்கிச் சிறகு விரித்துப் பறந்து செல்ல, இந்த விஷயம் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. மாணவிகள் சுகாதாரமாக வாழ நாப்கினைப் பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்திய நாப்கினை சுகாதாரமான முறையில் அழிப்பதற்காகத்தான் இந்த நாப்கின் எரியூட்டி இயந்திரத்தை வைத்துள்ளோம்.

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவியோடு அதாவது, கிராமத் தன்னிறைவு திட்டத்தின்கீழ் இந்த எரியூட்டி இயந்திரத்தை அமைத்துள்ளோம். மனரீதியிலான மற்றும் உடல்ரீதியிலான ஒரு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைத்த மகிழ்ச்சி, ஒவ்வொரு மாணவியின் முகத்திலும் தற்போது தெரிகிறது.

இந்த நாப்கின் இயந்திரத்தைப்போல திருச்சி முசிறி பகுதியில் பெண் ஒருவர் தயாரிக்கும் மூலிகை நாப்கினையும் வாங்கி, பள்ளியில் வைக்கலாம் என ஆலோசித்துவருகிறோம். இந்த விஷயத்தை கூச்சப்படும் விஷயமாக, பேசவே தயங்குகிற விஷயமா நினைப்பதுதான் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம். இந்த நாப்கின் எரியூட்டி இயந்திரங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வைக்கப்பட்டிருக்கும். நாப்கின் வழங்கும் திட்டத்தை, ரயில்வே துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.

தமிழக அளவில் எரியூட்டி இயந்திரம் வைக்கப்பட்டுள்ள முதல் பள்ளியாக எங்கள் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளங்குகிறது. தனி அறையில் இந்த நாப்கின் எரியூட்டி இயந்திரத்தை அமைத்து, நாப்கினை எப்படி அழிப்பது என மாணவிகளுக்கு உரிய செயல்முறை விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பெண்கள் மற்றும் ஆசிரியைகள் மூலம், இந்த நாப்கின் பயன்பாடு பற்றி தொடர்ச்சியாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தவுள்ளோம்" என்றார் பூபதி.


டிரெண்டிங் @ விகடன்