வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (10/07/2018)

கடைசி தொடர்பு:13:58 (10/07/2018)

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா - தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு! 

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில் நாளை (11.07.18) நடைபெற உள்ள, சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 11-ம் தேதி காலை 5 மணி முதல் 12-ம் தேதி காலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

ஆட்சியர் சந்தீப் நந்தூரி


இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில் நாளை 11.07.18 வீரன் அழகுமுத்துக் கோன் அவர்களின்  பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவானது அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடைபெறும் பொருட்டு, சட்டம் ஒழுங்கைப் பராமரித்திட 11.07.18 காலை 5 மணி முதல் 12.07.18 காலை  5 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டாலங்குளம் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்திடவும், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கட்டாலங்குளம் ஊரில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் வந்து விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் மற்றும் ஜோதி (விழா நிகழ்விடத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்துக்கு வெளியே) கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவுக்கு கலந்துகொள்ள அழைத்துவரப்படுவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாள்களில் ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்திட இருப்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அனுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மேலும், இத்தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க