`அமித் ஷா வருகையால்தான் தமிழகத்தில் மழை' - தமிழிசை பேச்சு!

அமித் ஷா வருகையால்தான் தமிழகத்தில் மழைபெய்துள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழிசை சௌந்தரராஜன்

ஒருநாள் பயணமாக நேற்று காலை சென்னை வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கிழக்குக் கடற்கரை சாலையில் மாநில நிர்வாகிகளுடன் பேசினார். இதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ``தமிழகத்தில் பா.ஜ.க வலுவடைந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான ஆதரவை மோடிக்கு தந்தீர்கள். நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும்" எனப் பேசினார். தமிழகப் பயணத்தை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார் அமித் ஷா. அவரின் வருகை மற்றும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது தமிழகத்தில் விவாதப் பொருளாக மாறியிருந்தாலும், இது தமிழக பா.ஜ.க-வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்தநிலையில்தான், அமித் ஷா வருகையால்தான் தமிழகத்தில் மழைபெய்துள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அமித் ஷாவை வழியனுப்பி வைத்தப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, `` அமித் ஷா வருகையால்தான் தமிழகத்தில் மழைபெய்துள்ளது. இந்த மழையால் தமிழகக் குளங்கள் நிரம்பும், தாமரை தானாக மலரும். தமிழகத்தில் தாமரை மலராது என யாரெல்லாம் கிண்டல் செய்கிறார்களோ, அவர்களை வைத்தே தாமரை மலர்ந்துவிட்டது என சொல்லவைப்போம். மேலும், மத்திய அரசு தமிழகத்துக்குப் போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாமல் அமித் ஷா பேசமாட்டார். தேர்தல்களை எதிர்கொள்ள வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இதற்கு தகுந்த பலன் கிடைக்கும்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!