குற்றாலம் அருவிகளில் களைகட்டிய சீசன்.. ஆர்ப்பரிக்கும் தண்ணீரால் பயணிகள் உற்சாகம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதமான தென்றல் காற்றுடன் சாரல் மழையும் பெய்வதால் மீண்டும் களைகட்டிய சீசன், சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

குற்றாலம் அருவிகளில் களைகட்டிய சீசன்

குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் சீசன் தொடங்கி இரு மாதங்கள் நீடிக்கும். சில வருடங்களில் போதிய மழை இல்லாமலும் சாரல் மழை பெய்யாமலும் பொய்த்துப் போவதுண்டு. இந்த ஆண்டு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய சீசன் சீராக நீடித்து வருகிறது. கடந்த வாரத்தில் அருவிகளில் தண்ணீர் கொட்டிய போதிலும் வெயில் தலைகாட்டியதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக குற்றாலத்தில் சீசன் மீண்டும் களைகட்டியிருக்கிறது. சில்லென்ற காற்றும் சாரல் மழையும் நீடிக்கிறது. அவ்வப்போது பெருமழையும் தலைகாட்டுகிறது. அத்துடன் மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதனால் கடந்த இரு தினங்களாக மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கும் நிலை உருவானது. 

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவில் தண்ணீர் அதிகம் கொட்டியதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணியளவில் நிலைமை சீரடைந்தது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பொங்கி வரும் தண்ணீரில் குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் உற்சாகக் குளியலிட்டு மகிழ்கிறார்கள். ஐந்தருவியில் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. அதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஐந்தருவி

பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. இது தவிர, குண்டாறு அணையின் மேல்பகுதியில் உள்ள நெய்யருவியில் தண்ணீர் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்கிறார்கள். இதனிடையே, தமிழக அரசின் சார்பாக சாரல் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!