வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:13:00 (10/07/2018)

மலைமீது கழிப்பறை கட்டிய இளைஞர்கள்! மகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்

எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத மலையில் உள்ள சொக்கன் அலை கிராமத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கழிப்பறை கட்டியுள்ளனர்.

மலையில் கட்டப்பட்ட கழிப்பறை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதி இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது `விழுதுகள் இளைஞர் மன்றம்'. தேனி மாவட்டத்தின் பல்வேறு சூழலியல், சமூக செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், மலைவாழ் மக்களுக்காக கழிப்பறை கட்டிக்கொடுத்த சம்பவம் தேனி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் தேனி மாவட்டத்தின் சிறந்த இளைஞர்கள் அமைப்பாக `விழுதுகள் இளைஞர் அமைப்பு' தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்காக பாராட்டுச்சான்றிதழ் மற்றும் 25,000 ரூபாய் பணம் பரிசளிக்கப்பட்டது. அந்தப் பணத்தை வைத்து அகமலை அருகே உள்ள சொக்கன் அலை என்ற மலை கிராமத்தில் கழிப்பறை கட்டியிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்.

சொக்கன் அலை மலை கிராமம்

எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத சொக்கன் அலை கிராமத்துக்கு, கழிப்பறை கட்டத் தேவையான அனைத்துப் பொருள்களையும் மலைப்பாதையில் 2 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றிருக்கிறார்கள். ``அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எங்களுக்கு நீண்ட நாள்களாக ஆசை. இருபதுக்கும் அதிகமான மலைவாழ் மக்கள் அங்கு வசிக்கிறார்கள். வனவிலங்கு அச்சுறுத்தல் இருக்கும் அக்கிராமத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள், குழந்தைகள் பெரிதும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். குறிப்பாக இரவு நேரங்களில். இந்நிலையில்தான் இந்தக் கழிப்பறையைக் கட்டத் தீர்மானித்தோம். கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு கட்டடத்தை சரி செய்து கழிப்பறையாக மாற்றினோம். இப்போது அம்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்றனர்.