வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (10/07/2018)

கடைசி தொடர்பு:12:19 (10/07/2018)

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்! - சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``நாடு முழுவதும் 2018- 2019-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 9-ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 1,400 ரூபாய் பெறப்பட்டது. நீட் தேர்வுக்காக 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 13,23,672 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் தமிழகத்திலிருந்து 1,07,288 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 24,000க்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளைத் தேர்வு செய்து தேர்வு எழுதினார்கள். சரியான முறையில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் இருந்த வினாத்தாளால் தமிழ்வழி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறமுடியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, மே 6-ம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கி உத்தரவிட வேண்டும் அல்லது ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும். மேலும் நீட் தேர்வு முடிவுக்கு இடைகாலத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ``நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டனர். மேலும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கி மருத்துவ சேர்க்கைக்கான புதிய தரவரிசைப் பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டனர்.