வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (10/07/2018)

கடைசி தொடர்பு:13:40 (10/07/2018)

ஊதிய உயர்வு கேட்ட ரப்பர் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ்!

திய உயர்வுகேட்டு ஒத்துழையாமை இயக்கம் என்ற பெயரில் போராட்டம் நடத்தும் அரசு ரப்பர் கழக ஊழியர்களுக்கு அரசு நோட்டீஸ் விநியோகித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரப்பர் தோட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, பரளியாறு, சிற்றாறு, கோதையாறு, மணலோடை, காளிகேசம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. பல ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள ரப்பர் மரங்களில் பால் வெட்டுதல், பால் சேகரித்தல், தோட்டப் பராமரிப்பு எனப் பல்வேறு பணிகளுக்காக நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் சுமார் 3,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் அரசு இழுத்தடித்துவருகிறது. எனவே, 'ஒத்துழையாமை இயக்கம்' என்ற பெயரில் கடந்த 4-ம் தேதி முதல் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி பாதி மரங்களில் மட்டுமே பால் வெட்டுவது. பால் வெட்டிய மரங்களில் இருந்து சேகரிக்காமல் இருப்பது என ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதையடுத்து அரசு ரப்பர் கழகத்துக்குப் பாதிக்கும் குறைவான ரப்பர்தான் உற்பத்தியாகிறது. இதையடுத்து சரியாக வேலைசெய்யாத ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

அனந்தகிருஷ்ணன்அந்த நோட்டீஸில், ``ஒரு கிலோ காய்ந்த ரப்பர் ரூ.80 முதல் ரூ.100 வரை விலை மதிப்புள்ளதாகும். வழக்கமாக வழங்கிவந்த ரப்பரைவிட குறைந்த எடையில் ஊழியர்கள் ரப்பர் வழங்கிவருகின்றனர். எத்தனை கிலோ எடை குறைகிறதோ அதற்குரிய தொகை  உங்களிடமிருந்து வசூல் செய்யப்படும்" என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.என்.டி.யு.சி. ரப்பர் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறுகையில், ``ரப்பர் கழக ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவது குறித்து அரசுபோட்ட பழைய ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. 2016 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சம்பள உயர்வு குறித்து வனத்துறை அமைச்சரிடம் 2 முறை பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து தொழிலாளர்கள் மொத்தமாக ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் நடத்திவருகிறார்கள். நோட்டீஸ் வழங்குவது வழக்கமான ஒன்றுதான். அரசு இந்த பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தொழிலாளர்களையும் அரசு ரப்பர் கழகத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்றார்.