அன்று வேட்பாளர்; இன்று பாஸ்போர்ட் மாஃபியா! - போலீஸில் சிக்கிய வி.சி.க பிரமுகர்

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதான வீரக்குமார்

போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய முக்கியமானவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 'தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்தக் கும்பல் கைவரிசையைக் காட்டியுள்ளது' என்கின்றனர் போலீஸ் தரப்பில். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த வீரக்குமார், அவரின் தம்பி பாலு என்கிற பாலசுப்பிரமணியன் மற்றும் சுரேஷ், உமர்சைன், அக்ஜத்குமார், இலங்கை தமிழர்கள் குணாளன், பாலாஜி, புரோக்கர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 11 பேரை, கடந்த 24-ம் தேதி போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் வீரக்குமார், பாலு உட்பட 9 பேர் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். `` விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் வீரக்குமார். இவர்களிடமிருந்து 91 போலி பாஸ்போர்ட்களைப் பறிமுதல் செய்துள்ளோம். இவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப், போலி முத்திரைகள், ஸ்கேனர் கருவி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளோம். சென்னையில் பெரியமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம்தான் இந்த தொழிலுக்கு வந்திருக்கிறார் வீரக்குமார். காவல்துறையிலும் இவருக்கு செல்வாக்கு உள்ளது. இவரிடம் வாங்கிய போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர்களின் பட்டியலைச் சேகரித்துவருகிறோம். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது" என்றனர். 

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், `` எழும்பூர் பகுதி தி.மு.க-வில் ஒருகாலத்தில் கோலோச்சிய முக்கிய பிரமுகர் ஒருவரின் நட்பில் இந்தக் கும்பல் இருந்துள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம் சென்னை அண்ணாசாலையிலும் வேளச்சேரியிலும் ஏராளமான சொத்துகளை இந்தக் கும்பல் வாங்கிக் குவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் லண்டனிலும், மலேசியாவிலும் அதிக நாள்கள் தங்கியிருந்து இவர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர். குறிப்பாக, இலங்கைத் தமிழர்களைத்தான் அதிகளவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை மாற்றி போலி பாஸ்போர்ட் தயாரிப்பதில் இந்தக் கும்பல் கைதேர்ந்தது. இதற்காக டிராவல்ஸ் நிறுவனம் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்" என்றார். 

ஆனால், இந்த விவகாரம் குறித்துப் பேசும் வீரக்குமார் தரப்பினர், `` விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியதால்தான், வேட்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நிறுத்தப்பட்டார். வள்ளியூர் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவும் பணியை முன்னின்று நடத்தினார். வீரக்குமார் மற்றும் அவரின் தம்பி பாலுவின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள்தான் போலீஸில் தவறான தகவல்களைக் கொடுத்து அவர்களைச் சிக்க வைத்துவிட்டனர். சட்டப்படி இந்த வழக்கைச் சந்தித்து எங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்போம். போலீஸார் சொல்வதுபோல அவரிடம் கோடிக்கணக்கில் சொத்துகள் இல்லை" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!