வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (10/07/2018)

கடைசி தொடர்பு:14:27 (10/07/2018)

' லண்டனில் ஸ்டாலின்; பெங்களூரில் திருமா!'  - அரசியல் சூழலால் கொதிக்கும் 9 கட்சிகள் 

' எட்டுவழிச் சாலை உள்பட மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் நேரடியாகத் தி.மு.க களமிறங்கினால், அதைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் களமிறங்க வசதியாக இருக்கும். ஆனால், ஸ்டாலின் மௌனம் காக்கிறார்' என்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள்.

' லண்டனில் ஸ்டாலின்; பெங்களூரில் திருமா!'  - அரசியல் சூழலால் கொதிக்கும் 9 கட்சிகள் 

ண்டனுக்கு ஒருவார காலம் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். அதேநேரம், கடந்த சில நாள்களாக பெங்களூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் திருமாவளவன். ` மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் எதிர்க்கட்சி தீவிரமாக இயங்க வேண்டும். ஸ்டாலின் மௌனத்தால் ஒன்பது கட்சிகளின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

பசுமை வழிச்சாலை, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது தொடர் வழக்குகள் என தமிழக அரசின் செயல்பாடுகளால் அரசியல் கட்சிகள் முடங்கியுள்ளன. முன்ஜாமீன், நீதிமன்றப் பணிகள் என வேல்முருகன், சீமான் உள்ளிட்டவர்கள் அலைந்துகொண்டிருக்கின்றனர். கடந்த 5-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கடந்த சில நாள்களாக எங்கே சென்றார் எனத் தெரியவில்லை. எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக சி.பி.எம் கட்சியின் பாலபாரதி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து கடந்த 8-ம் தேதி அறிக்கை வெளியிட்டார் திருமா. அதன்பிறகு அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். `` பெங்களூரில் உள்ள இயற்கை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வருகிறார் திருமா. வரும் 15-ம் தேதிதான் சென்னை வருகிறார். வரும் 17-ம் தேதி திருவண்ணாமலையில் நடக்கும் பசுமை வழிச்சாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார் திருமாவளவன். கடந்த சில வருடங்களாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். கூடவே, சைனஸ் பிரச்னையும் சேர்ந்துகொண்டது. இவற்றில் இருந்து விடுபடவும் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டார். ஆனால், தொடர் அரசியல் பணிகளின் காரணமாக அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இதனுடன் சேர்த்து கடந்த ஒரு மாத காலமாக கடுமையான தொண்டை வலி ஏற்பட்டுவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம் என 10 நாள் சிகிச்சை எடுப்பதற்காக பெங்களூரு சென்றிருக்கிறார். ஆனால், எந்த மருத்துவமனை என்ற விவரம் நிர்வாகிகளுக்குச் சொல்லப்படவில்லை" என விவரித்தவர், 

திருமாவளவன்`` உடல்ரீதியாக பிரச்னைகள் திருமாவை வாட்டி வதைத்தாலும், அரசியல்ரீதியாக ஆளும்கட்சிக்கு எதிரான போராட்டங்களை தி.மு.கவினர் வீரியமாக முன்னெடுக்கவில்லை என்ற ஆதங்கமும் அவருக்குள் இருக்கிறது. மருத்துவமனைக்குப் புறப்படுவதற்கு முன்பாக செயல் தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்கு நேரம் கேட்டார். இந்தச் சந்திப்பில் சி.பி.எம் பாலகிருஷ்ணனும் உடன் வருவதாக இருந்தது. ஆனால், ' அந்த நேரத்தில் நான் வேறு வேலையாக இருக்கிறேன். பார்ப்பது சிரமம்' எனக் கூறிவிட்டார் ஸ்டாலின். திருமாவும் சிகிச்சைக்காக பெங்களூரு சென்றுவிட்டார். இதற்கு மறுநாள் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். இந்த சந்திப்பில், ' மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அமைதியாக இருக்கிறோம்' எனக் கூறியதாகவும் தகவல் கிடைத்தது.

வி.சி.க, சி.பி.எம் மட்டுமல்லாமல் தி.மு.கவுடன் கூட்டணி சேர  இருக்கும் அனைத்து கட்சிகளும் இதே மனநிலையில்தான் உள்ளன. தி.மு.கவின் செயல்பாடுகளில் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் திருமா. எட்டுவழிச் சாலை உள்பட மக்களை பாதிக்கும் விஷயங்களில் நேரடியாகத் தி.மு.க களமிறங்கினால், அதனைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் களமிறங்க வசதியாக இருக்கும். தி.மு.க ஆர்வம் காட்டாமல் இருப்பதால், ஸ்டாலினை ஓரம்கட்டிவிட்டு களத்தில் இறங்க மற்ற தோழமைக் கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன. தி.மு.க கூட்டணிக்குள் சிக்கிக் கொண்டு நெளிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இருப்பதால்தான் ஆளும் அ.தி.மு.கவும் பா.ஜ.க அரசும் மக்களுக்கு எதிரான திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. 

போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தி.மு.க மௌனமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் முன்னாள் சி.பி.எம் எம்.எல்.ஏக்கள் பாலபாரதி, டெல்லி பாபு ஆகியோர் கைதானார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் களத்தில் நேரடியாக நிற்கிறார். மக்கள் கருத்துக்களைக் கேட்கிறார் அன்புமணி. திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கையோடு, கோவை கொடீசியாவில் பிரமாண்ட கூட்டம் நடத்தியிருக்கிறார் தினகரன். மூன்று, நான்கு மாவட்டங்களை பாதிக்கக்கூடிய இந்த விவகாரத்தில் களத்தில் ஸ்டாலின் நேரடியாக நின்றிருக்க வேண்டும். தி.மு.கவைத் தவிர, அனைவருமே மேற்கு மாவட்டங்களில் அரங்கேறும் பசுமை வழிச்சாலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் அந்த மக்களைச் சந்திக்கச் ஸ்டாலின் செல்லாததும் மக்கள் கருத்தைக் கேட்காததும் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. அவருடன் இருக்கும் 9 கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் களமிறங்கி கைதாகியிருந்தால் எடப்பாடி பழனிசாமி அரசால் என்ன செய்திருக்க முடியும்? பெரிய கட்சியான தி.மு.க மௌனமாக இருப்பதால்தான், சிறிய சிறிய கட்சிகள் மீதெல்லாம் அடுத்தடுத்த வழக்குகளைப் போட்டு முடக்குகிறார்கள். இதுவரையில் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்த அரசியல் கட்சிகளையெல்லாம் இந்த அரசு முடக்கிவிட்டது. வேல்முருகன், சீமான் என களத்தில் யாருமே இல்லை. கலை பண்பாட்டுப் பேரவையாக இயங்கி வந்த பாரதிராஜாவும் அமைதியாகிவிட்டார். 

இந்த நேரத்தில்தான் தி.மு.க தன்னுடைய பங்களிப்பைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஓர்  எதிர்க்கட்சியாக ஸ்டாலினுக்கான வேலைகள் அதிகம் இருக்கின்றன. சிறிய கட்சிகளின் தலைவர்கள் வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பசுமை வழிச்சாலையால் நிலங்களை இழந்து கதறிக் கொண்டிருக்கும் விவசாயிகளை மீட்பதற்கு எந்தப் பிரதான அரசியல் கட்சிகளும் அங்கே களத்தில் இல்லை. தற்போது லண்டனுக்குக் கிளம்பிவிட்டார் ஸ்டாலின். அ.தி.மு.கவுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க ஸ்டாலின் ஏன் தயங்குகிறார் என்பதே மர்மமாக இருக்கிறது" என்றார் வேதனையுடன். 

கடந்த 5-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன். ' பிரதான கட்சிகளின் எதிர்வினை போதுமானதாக இல்லை. மக்கள் அதிகாரம் அமைப்பினர் தூண்டினார்கள் என போலீஸ் சொல்கிறது. தூண்டுவதுதான் எங்கள் வேலை. பாமர மக்களுக்கு எந்த விவரங்களும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்குத் தெரியாது. இந்த நிறுவனத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்ற தகவல் எனக்குத் தெரிந்தால், அதை மக்களிடம் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. இதற்குப் பெயர் தூண்டிவிடுவது என்றால் அதை நாங்கள் செய்வோம். இது ஒரு ஜனநாயகக் கடமை. அரசியல் சூழல்கள் மிக மோசமாகச்  சென்று கொண்டிருக்கின்றன என ஆதங்கப்பட்டார். 

" பிரதான கட்சிகளின் எதிர்வினை போதுமானதாக இல்லை எனத் திருமா கூறிய வார்த்தைகள், தி.மு.கவை நோக்கி நேரடியாகச் சொல்லப்பட்டவை" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.