கர்நாடகாவில் நிரம்பி வழியும் அணைகள்! - தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க குமாரசாமி உத்தரவு!

காவிரியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

குமாரசாமி

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டு தமிழகத்தின் பல ஆண்டுகால பிரச்னைக்குச் சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம். அதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் மசூத் ஹுசேனும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் 4 மாநிலங்களின் சார்பில் ஆணையத்தின் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவே, கர்நாடக முதல்வர் குமாரசாமி தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனால் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. மழை பெய்தால்தான் காவிரி நீர் தமிழகத்துக்கு வரும் என்ற நிலை உருவானது. இதற்கிடையே, காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் ஜூலை மாதத்துக்கான நீரை உடனடியாக திறக்க அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் காவிரியிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 35,000 கன அடியிலிருந்து 38,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!