வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (10/07/2018)

கடைசி தொடர்பு:14:20 (10/07/2018)

``டெல்லியைப்போல் செய்துவிடுவோம்”- ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்த அமைச்சர்

``உடனே பணிக்குத் திரும்பாவிட்டால் டெல்லியைப்போல் செய்துவிடுவோம்” என்று ரேஷன் கடை ஊழியர்களை புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

அமைச்சர் கந்தசாமி

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருள்களை பொதுமக்களுக்கு நேரடியாக வீட்டுக்கே சப்ளை செய்யும் திட்டத்தை அண்மையில் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தை புதுச்சேரியிலும் செயல்படுத்திவிடுவோம் என்று ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்திருக்கிறது புதுச்சேரி அரசு. புதுச்சேரி சட்டப்பேரவையின் 2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் நாராயணசாமி 2018-19-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்

நிலுவையில் இருக்கும் சம்பளத்தை வழங்கக் கோரி புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த மே மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் குறித்து இன்று சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ பாஸ்கரன் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, ``வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப மறுத்தால் டெல்லியைப் போன்று ரேஷன் பொருள்களைப் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடியாகப் பதில் அளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க