`2 மாதத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்தவும்' - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட லோக் ஆயுக்தா சட்டமசோதாவை 2 மாதத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோக் ஆயுக்தா மசோதா

லோக் ஆயுக்தா சட்டமசோதாவை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கான காலக்கெடு இன்று முடிவடைய உள்ள நிலையில், லோக் ஆயுக்தா சட்டமசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை மீன்வளம், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இதற்கான தலைவரை ஆளுநர் நியமிக்க உள்ளநிலையில், நியமன குழுவில் முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர், சபாநாயகர் உள்ளிட்டோர் இருப்பார்கள் என மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல மக்கள் பிரதிநிதிகள் மீது புகார் அளித்து நிரூபணமாகாவிடில் புகார் அளித்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் உள்ளிட்ட அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றிருந்தன. விவாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நிறைவேற்றப்பட்ட மசோதாவின் பிரமாண பத்திரத்தை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இதையடுத்து, தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டமசோதாவை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!