மாயமான போலீஸ் கணவர்... மனைவி கொடுத்த அதிர்ச்சிப் புகார்!

காவலர் முருகன்

சென்னையில் கடந்த 19ம் தேதி முதல் மாயமான காவலர் குறித்து ஐ.சி.எப் போலீஸார் விசாரித்துவருகின்றனர். அவரின் மனைவியிடம் விசாரித்தபோது கடன் தொல்லையால் அவர் மாயமாகியிருக்கலாம் என்று கூறியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் முத்தாள். இவரின் மகன் முருகன். இவர், சென்னைப் புதுப்பேட்டையில் காவலராகப் பணியாற்றுகிறார். இவரின் மனைவி அன்னிபெசன்ட். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணி காவலராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இவர்கள் வில்லிவாக்கத்தில் குடியிருந்துவருகின்றனர். இந்தநிலையில் கடந்த 19ம் தேதி குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருக்கோவிலூருக்குச் சென்றார். அங்கு குழந்தைகளை முத்தாள் வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. 

மகனைக் காணவில்லை என்று முத்தாள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஐ.சி.எப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராயப்பன் விசாரணை நடத்திவருகிறார். தொடர்ந்து அன்னிபெசன்ட் என்பவரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், என்னுடைய கணவர் முருகனுக்குக் கடன் தொல்லை இருந்தது. கடனைக் கேட்டு வீட்டுக்குச் சிலர் வருவார்கள். மேலும், உடல் ரீதியாகவும் சில பிரச்னைகள் இருந்தன. அதற்கு சிகிச்சை பெற திருவனந்தபுரம் சென்றார். பிறகு, திருப்பதி சென்று விட்டு வீட்டுக்கு வருவதாகக் கூறினார். 19 ம் தேதி வீட்டை விட்டுச் சென்றவர் இன்னமும் வீடு திரும்பவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

காவலர் முருகன் மாயமான வழக்கில் சில சந்தேகங்கள் இருப்பதாக போலீஸார் நினைக்கின்றனர். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. 

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!