வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (10/07/2018)

கடைசி தொடர்பு:14:12 (10/07/2018)

கடனை திருப்பிச் செலுத்த தந்திர வேலை! - ஃபைனான்ஸியருக்கு அதிர்ச்சி கொடுத்த புரோக்கர் 

சென்னையில் 2,000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கடனைச் செலுத்திய புரோக்கரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

கள்ள நோட்டு

சென்னை முகப்பேர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் திருமங்கலம் பாடி குப்பம் சாலையில் இருசக்கரம், கார்களுக்கு ஃபைனான்ஸ் செய்துவருகிறார். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநின்றவூரைச் சேர்ந்த ராஜேஷ், தன்னுடைய காரின் பெயரில் ஃபைனான்ஸாக ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். சம்பவத்தன்று வட்டி ரூ.4,000ம், கடன் வாங்கிய தொகை ரூ.2 லட்சம் என 2,04,000 ரூபாயை பாலசுப்பிரமணியனிடம் கொடுத்துள்ளார். 

அந்தப் பணத்தை எண்ணிய பாலசுப்பிரமணியனுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில், 1,96,000 ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்று தெரிந்தது. இதுகுறித்து அவர் திருமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், 2,000 ரூபாய் கலர் ஜெராக்ஸ் கொடுத்த ராஜேஷிடம் விசாரித்துவருகிறார். 

ராஜேஷ் எங்கு 2,000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்தார். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.