வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (10/07/2018)

கடைசி தொடர்பு:14:50 (10/07/2018)

“குழந்தை தொட்டிலில் படுத்திருக்கும்போது வீட்டை இடிச்சாங்க!” - வாலாங்குள சோகம்

ஒரு வீட்டை இழப்பது என்பது ஓர் உலகத்தையே இழப்பதுபோல அத்தனை துயரமானது! கோவை, வாலாங்குளத்தில் கடந்த இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடென்னும் உலகத்தைத் தொலைத்துவிட்டு துயரில் உழல்கிறார்கள்.  

“குழந்தை தொட்டிலில் படுத்திருக்கும்போது வீட்டை இடிச்சாங்க!” - வாலாங்குள சோகம்

காலங்காலமாகக் குடியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு நடுத்தெருவில் நிற்பதைவிட அவலம் வேறெதுவும் இல்லை. ஏனெனில், வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல. ஒரு வீட்டை இழப்பது என்பது ஓர் உலகத்தையே இழப்பதுபோல அத்தனை துயரமானது! கடந்த இரண்டு தலைமுறைகளாக கோவை, வாலாங்குளத்தில் வாழ்ந்துவந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடென்னும் உலகத்தைத் தொலைத்துவிட்டு துயரில் உழல்கிறார்கள்.  

`` `உங்கள் குடிசையைக் காலி செய்யுங்கள். உங்களுக்கு கான்கிரிட் வீடு தருகிறோம்’ என்று சொல்லி எங்கள் குடிசையை இடித்துத் தள்ளிய அரசு, ஆண்டுகள் பல ஆனபின்பும் எங்களுக்கான வீட்டைக் கொடுக்கவில்லை'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் வாலாங்குளத்து மக்கள். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கும், மாநகராட்சி அலுவலகத்துக்கும், குடிசை மாற்றுவாரிய அலுவலகத்துக்கும் மாறிமாறி மனுகொடுக்க அலைந்து அலுத்துப்போய்விட்ட அவர்களிடம் பேசினோம். 

``என் புள்ளையப் பாருங்க சார்... கொஞ்சம் விட்ருந்தா செத்துப்போயிருப்பான்...'' ஆவேசமாகப் பேச ஆரம்பித்தார் ரம்யா. 

``இவனுக்கு இப்போ நாலு வயசு. இவன் நாலு மாசமா இருக்கும்போது எங்க வீட்டை இடிச்சாங்க. அப்போ இவன் தொட்டிலில் படுத்திருந்தான். குழந்தையைத் தூக்குறதுக்குக்கூட அவுங்க அவகாசம் கொடுக்கலை. வீட்ல இருந்த எந்தச் சாமான்களையும் எங்களால முழுசா எடுக்க முடியலை. அவ்வளவு அவதி அவதியா எங்க வீடுங்களையெல்லாம் இடிச்சித் தள்ளினாங்க. இடிச்சு வருஷம் அஞ்சு ஆச்சு. இன்னவரைக்கும் எங்களுக்கு வீடு கிடைக்கல. கூலி வேலைக்குப் போயிதான் வயித்தக் கழுவுறோம். இத்தினியோண்டு குடிசையா இருந்தாலும் அது எங்களுதுன்னு இருந்துச்சு. இப்போ வாடகை மட்டுமே மூவாயிரம் ரூபா ஆவுது. 

வாலாங்குளம் வீடு

கிடைக்கிற வருமானத்துல முக்கால்வாசி வாடகையைக் கொடுத்துட்டு `இழுத்துக்கோ பறிச்சிக்கோ’னு வாழ வேண்டியதாயிருக்கு. கேட்டால், `நீங்க புறம்போக்குல இருந்தீங்க... ஏன் இவ்ளோ அதிகாரம் பண்றீங்க'னு சொல்றாங்க. ரெண்டு மூணு தலைமுறையா கூலி வேலைதான் பாத்துக்கிட்டு இருக்கோம். சோத்துக்கே வழியில்லாத சூழல்ல, சொந்த நிலம் எங்கிருந்து வாங்குறது? அந்த அளவுக்கு எங்கக்கிட்ட சத்து இல்ல. கீழ்நிலையில உள்ளவங்களை முன்னேற்ற வேண்டிய அரசாங்கம் இப்படி மேலும் மேலும் நசுக்குனா நாங்க எப்படி மேல வர்றது? வீடு தர்றோம்னு சொல்லி 21,000 ரூபாய் பணம் கட்டச் சொன்னாங்க. வட்டிக்கு வாங்கிக் கட்டினோம். பணம் கட்டி ஒன்பது மாசம் ஆச்சு. ஆனால், இன்னும் வீடு கொடுத்தபாடில்லை'' என்று இயலாமையும் ஏமாற்றமுமாய் முடித்தார் ரம்யா.

அடுத்ததாகப் பேசிய லலிதா, ``வாலாங்குளத்துல மொத்தம் 1,500 குடிசைகள் இருந்துச்சு. அதுல 792 குடும்பங்களுக்கு அம்மன்குளத்துல வீடு கொடுத்துட்டாங்க. மீதம் உள்ளவங்களுக்கு இன்னவரைக்கும் வீடு கொடுக்கலை. அது ஏன்னும் புரியலை. வீடு இடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு. புதிய வீட்டுக்கு நாங்க பணம் கட்டி 9 மாசம் ஆச்சு. வீடு கிடைக்காதவங்களெல்லாம் வேற வேற ஏரியாவுக்கு வாடகைக்குப் போயிட்டாங்க. வாடகை கொடுத்து சமாளிக்க முடியலைங்கிறது ஒருபக்கம் இருந்தாலும் வீடு வாங்காத யாராலும் அட்ரஸ் மாத்த முடியலங்கிறது பெரிய பிரச்னை. அட்ரஸ் மாத்திட்டா, `நீங்கதான் வேற இடத்துக்குப் போயிட்டீங்களே... உங்களுக்கு வீடு இல்லை'னு சொல்லிருவாங்க. அட்ரஸ் மாத்த முடியாததால எங்களுக்கு ஏராளமான பிரச்னைகள் வருது. ஒவ்வொருமுறை மனுகொடுக்க வர்றதுக்கும் நாங்க ஒருநாள் வேலையை விட்டுட்டு வரணும். அதுமட்டுமல்ல திக்குக்கு ஒவ்வொருத்தராச் சிதறிப் போயிட்டவங்க எல்லாரையும் ஒன்றுதிரட்டி கொண்டுவரதுக்குள்ள படாதபாடு படுறோம். இது எதுவுமே அதிகாரிங்களுக்குப் புரிய மாட்டேங்குது. எங்களுக்கு உடனே வீடு கொடுக்கணும். இல்லைன்னா நாங்க வாலாங்குளத்திலேபோய் குடிசைப் போட்டு தங்கிக்குவோம். அதைவிட்டா எங்களுக்கு வேற வழி இல்லை'' என்கிறார் கோபத்தோடு.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனிடம் விளக்கம் கேட்டோம், ``மாநகராட்சிப் பணிகள் எல்லாம் எப்பவோ முடிந்துவிட்டது. குடிசை மாற்றுவாரியத்தினர் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு படிப்படியாக வீடுகளை வழங்கி வருகிறார்கள். இதில் என்ன பிரச்னை என்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் விசாரிக்கிறேன். அவர்களிடம் கலந்துபேசி வாலாங்குளத்து மக்களுக்கு விரைவில் வீடுகிடைக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.


டிரெண்டிங் @ விகடன்