ஃபார்மலின் மீன் விற்பனை எதிரொலி! சென்னை மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை

ஃபார்மலின் கலப்படம் செய்யப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, சென்னை சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு

தமிழகத்தில் ஃபார்மலின் கலப்படம் செய்யப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னை சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாதிரி சோதனைக்காக மீன்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் மீன் மார்க்கெட் பரபரப்புடன் காணப்பட்டது.

அதிகாரிகள்

இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `தமிழகத்தில் தேவையைக் காட்டிலும் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதால் மீன்களைப் பதப்படுத்துவதற்கான அவசியம் இல்லை. சமூக விரோதிகளால் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் ஃபார்மலின் கலப்படம் செய்யப்பட்ட மீன்கள் இல்லை. அண்டை மாநிலங்களிலிருந்து வரக்கூடிய மீன்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன' என்று தெரிவித்தார். தொடர்ந்து அரசியல் குறித்துப் பேசிய அவர் `தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக  அமித் ஷா அரசை குற்றம் சாட்டவில்லை  ஒட்டுக்குப் பணம் கொடுப்பது பற்றிதான் அமித் ஷா பேசி இருக்கிறார்' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!