வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:16:00 (10/07/2018)

தோழர்களுடன் கைகோக்கும் சரத்குமார்! - போராட்டங்களில் பங்கேற்க முடிவு?

 பாலகிருஷ்ணனைச் சந்தித்த சரத்குமார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனைச் சந்தித்து, தமிழக அரசியல்குறித்து பேசியிருக்கிறார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

பசுமைவழிச் சாலை விவகாரத்தில், தமிழக அரசுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிவருகிறது சி.பி.எம் கட்சி. கடந்த வாரம் இதுதொடர்பாக ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார், சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். இந்த சந்திப்பில், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடவேண்டியதன் அவசியத்தை சி.பி.எம் கட்சி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில்,  பாலகிருஷ்ணனை சந்தித்துப் பேசியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள், " இந்த சந்திப்பில் தமிழக அரசியலின் சூழல்கள்குறித்து விவாதிக்கப்பட்டது. பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க-வைத் தவிர்த்து, இதர கட்சிகளுடன் இணைந்து அரசியலில் பயணிக்க ச.ம.க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னோட்டம்தான் பாலகிருஷ்ணனுடனான சந்திப்பு. இன்னும் சில தினங்களில், சி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனை சந்திக்கத் திட்மிட்டுள்ளோம். அடுத்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார் சரத். வரும் நாள்களில் சி.பி.எம் கட்சியோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என்றனர்.