`சாதிக்க நினைச்ச எங்களுக்கு சாதிச் சான்றிதழ் தடையாக இருக்கு'-கலங்கும் மாற்றுத்திறனாளி சகோதரர்கள்

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிபெண்கள் பெற்றும், சாதிச் சான்றிதழ்கள் இல்லாததால் அரசுக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். எங்களை கல்லூரியில் சேர்த்துக்கொள்வதற்கு உதவுங்கள் எனப் பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளி சகோதரர்கள் தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்து, கல்விக் கனவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்தவர்கள் பிரபுதேவா, மாதவன். அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவருமே பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளிகள். தஞ்சாவூர் மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த இவர்கள், தேர்வு  முடிவில் பிரபுதேவா 748 மதிப்பெண்களும் மாதவன் 742 மதிபெண்களும் எடுத்தனர். நாடோடி இனத்தை சேர்ந்தவர்களான இவர்கள், மேற்படிப்பு படிக்க பலவித கனவுகளோடு தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் அளித்தனர். அப்போதே கல்லூரி நிர்வாகம், 'சாதிச் சான்றிதழ் வாங்கிட்டு வாங்க' என்று சொல்லி அனுப்பியிருக்கின்றனர். பிரபுதேவாவும் மாதவனும் அவர்கள் வசிக்கும் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்குச் சென்று, `நாங்க கல்லூரியில் சேரவேண்டும். எங்களுக்கு சாதிச் சான்றிதழ் கொடுங்க' எனக் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர்கள், ``நாடோடி இன மக்களை பிரதமர் மோடி பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அறிவித்தார். அதற்கான அரசாணை இன்னும் எங்களுக்கு வரவில்லை. அதனால், சாதிச் சான்றிதழ் தரமுடியாது'' எனக் கூறி அனுப்பிவிட்டார்கள். சரி, கல்லூரியில் விஷயத்தைச் சொல்லி சேர்ந்துவிடலாம், சேர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருவரும் தஞ்சாவூர் கல்லூரிக்கு வந்துவிட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், இடஒதுக்கீடு போன்ற பிரச்னைகள் இருக்கு. அதனால், சாதிச் சான்றிதழ் இல்லாமல் நிச்சயமாக கல்லூரில் சேர்த்துக்கொள்ள முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். என்ன செய்வதெனப் புரியாமல் திக்கற்று நின்ற மாணவர்களை இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி அழைத்துக்கொண்டு கலெக்டர் அண்ணாத்துரையிடம்  சென்று மனு கொடுக்க வைத்தார்.

கலெக்டர் அண்ணாத்துரை, ``அரசுக் கல்லூரியில்தான் சேர வேண்டுமா? சத்திரம் நிர்வாகத்தின்கீழ் வரும் கல்லூரியில் சேர்ந்து கொள்ளுங்கள். நான் பரிந்துரைசெய்கிறேன்'' எனக் கூறியிருக்கிறார். அதற்கு அந்த மாணவர்கள், ``சார், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில்தான் எங்களைப் போன்ற பார்வைக்குறையுடைய மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் படித்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும். தனியாகப் படித்தால் நாங்க தவித்துப்போவோம்'' எனக் கூறியிருக்கிறார்கள். அதற்கு கலெக்டர், `இரண்டு நாள்கள் கழித்து வாருங்கள்' எனக் கூறி திருப்பி அனுப்பியிருக்கிறார்.

மாணவர்கள் பிரபுதேவா, மாதவனிடம் பேசினோம். ``நாங்க இரண்டு பேரும் அண்ணன் தம்பி. எங்க அப்பாவும் அம்மாவும் தேவகோட்டையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிகிறார்கள். எங்க குடும்பத்துக்கு வறுமையையும் கொடுத்து, எங்க கண்ணையும் பறிச்சுட்டான் ஆண்டவன். எங்க குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. நாங்க படிச்சு நல்ல நிலைமைக்கு வந்து வறுமையின் இருளைப் போக்க வேண்டும் என நினைத்து படித்தோம். ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் எங்க கனவு. எங்களைவிட குறைந்த மார்க் எடுத்த மாணவர்கள் எல்லாம் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள். போதுமான மார்க் எடுத்தும் சாதிச் சான்றிதழ் இல்லாததால், எங்களை சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள். பத்தாம் வகுப்பு படித்த சான்றிதழில் எங்களைப் பிற்படுத்தப்பட்ட சாதி எனப் பதிவுசெய்திருந்தனர். அதன்படி எங்களைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளுங்கள். நாங்க படிச்சாதான் எங்க வாழ்க்கைநிலை மாறும் எனச் சொன்னோம். உரிய சாதிச் சான்றிதழ் இல்லாமல் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறிவிட்டார்கள். அதனால், என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிறோம். இதை அரசு செய்கிற தவறு என்று சொல்வதைவிட,  நாங்கள் மனிதராய்ப் பிறந்ததே தவறு என எண்ணி ஒவ்வொரு நொடியும் நொந்துகொண்டிருக்கிறோம். சாதிக்க நினைக்கிற எங்களுக்கு சாதி ஒரு தடையா இருக்கு '' என்றார்கள் கலங்கிய கண்களுடன்.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அரவிந்தசாமியிடம் பேசினோம். ''துப்புரவுத் தொழிலாளியின் பிள்ளைகள் பார்வையற்ற நிலையிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு சாதிச் சான்றிதழ் தடையாக இருக்கிறது. இருக்கப்பட்டவர்களின் பிள்ளைகளாக இருந்தால், தனியார் கல்லூரியில் சேர்ந்துகூட படித்துக்கொள்ளலாம். ஆனால், இவர்கள் வறுமையின் பிடியில் உள்ளவர்கள். இவர்களால் என்ன செய்ய முடியும். நிர்கதியாய் நிற்கிறார்கள். இவர்களை உடனே கல்லூரியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், போராட்டம் நடத்தி அவர்கள் இதுவரை படித்த பள்ளிச் சான்றிதழ்களை அரசிடமே ஒப்படைப்போம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!