வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:17:00 (10/07/2018)

`மீனவர்கள் தென்கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்!

தென்கடலோரப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வானிலை

இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, `வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது; அதேபோல மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 9 செ.மீ மழையும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 8 செ.மீட்டர் மழையும் தேனி மாவட்டம் பெரியாரில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன. சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வெயிலின் அளவு அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால் தென் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். எனவே, மீனவர்கள் தென் கடலோரம் ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். குறிப்பாக, ஆழ் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.