சென்னையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் காய்ந்துபோன மரங்கள், பள்ளங்கள்!

ஆடி மாதம் பிறக்கும் முன்பே காற்று பலமாக வீசுகிறது. சமீபகாலமாக, அவ்வப்போது பலத்த காற்று வீசுவதால் சாலையில் நடந்து செல்வோரையும் மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோரையும்  அசைத்துப்பார்க்கிறது. அவ்வப்போது பெய்யும் திடீர் மழையுடன் காற்றும் கூட்டுசேர்ந்து வீசும்போது, பலர் நிலைகுலைந்துபோகிறார்கள்.

இப்படி நடக்கும் இயற்கை நிகழ்வை நாம் மிகச்சாதுர்யமாக எதிர்கொள்ள வேண்டும். இன்னும் சில தினங்களில் ஆடி மாதம் பிறக்கவிருக்கிறது. அப்போது காற்று வீசும். `ஆடி மாசக் காத்துல அம்மியே பறக்கும்' என்றொரு பழமொழி உண்டு. அப்படியொரு காற்று வீசும்போது, பலமற்ற மரங்கள், காய்ந்துபோன மரத்துண்டுகள், பலமிழந்த பெயர்ப்பலகைகள் போன்றவை விழ நேர்ந்தால் பேராபத்து நிகழும். ஆகவே, மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் இதுவிஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சென்னையில், ஆங்காங்கே மரங்களுக்குக் குறைவில்லை. சாலைகள்தோறும் வீதிகள்தோறும் நெடிது வளர்ந்து நிற்கும் மரங்கள்,  ஏற்கெனவே வந்துபோன சுனாமி, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது உடைந்து விழுந்திருந்தாலும், சில மரங்களில் காய்ந்து பலமிழந்துபோன  கிளைகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றன். படத்தில் நீங்கள் பார்ப்பது சென்னை அண்ணாநகர் பஸ் டெப்போ அருகே உள்ள சிக்னலை அடுத்து சாலையோரம் நிற்கும் மரத்தில் காணப்படும் காய்ந்துபோன மரத்துண்டு. தடிமனான, மிகவும் நீளமான அந்த மரத்துண்டு எப்போது விழும் என்று தெரியவில்லை. இது நூறடி ரோடு என்பதால், இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும். வேலைக்குச் செல்லும் அவசரத்தில், வீடு திரும்பும் அவசரத்தில் செல்வோரின்மீது அந்தரத்தில் தொங்கும் அந்த காய்ந்த மரத்துண்டு எப்போது வேண்டுமானாலும் விழலாம்.

சாலையில் பள்ளம்

சென்னை சாலைகளில் இதுபோன்று ஏராளமான மரங்களைக் காண முடிகிறது.  தீவிரமாகக் காற்று வீசும் ஆடி மாதத்தில், பேய்க்காற்று வீசலாம்.  அதனால், உலர்ந்துபோன மரங்கள் நாம் நினைத்துப்பார்க்காத நேரங்களில் முறிந்து விழலாம். விபத்து எதுவும் விபரீதமாவதற்குள் விழித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு இருக்கிறது. விழித்துக்கொண்டு செயல்படுவார்களா?

இதேபோல, சென்னையின் பெரும்பாலான சாலை ஓரங்களில் பல்வேறு பணிகளுக்காக, குழாய்கள் பதிப்பதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டுக் கிடக்கிறது. பணி முடிவடைந்துவிட்டபோதிலும் பள்ளங்கள் மட்டும் வாய்பிளந்து கிடக்கின்றன.

சென்னைக்கு போக்குவரத்து நெரிசல் ரொம்பப் பொருத்தம். அப்படி இருக்கும்போது, மேடு பள்ளமாகக் காட்சியளிக்கும் இந்தச் சாலைகளால் மிக மோசமான அளவில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது பலர் கீழே தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சென்னை எழும்பூர், பெரம்பூர், மாதவரம் மட்டுமல்லாமல், பல பகுதிகளில் இதே நிலைமைதான். சாதாரண மழைக்கே சென்னை வீதிகள் மிதக்கும்போது, கனமழை பெய்தால் இதுபோன்ற மேடு பள்ளங்களில் மழைநீர் தேங்கி உயிரைக் காவு வாங்கலாம். இவை நிகழாமலிருக்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!