வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (10/07/2018)

கடைசி தொடர்பு:17:52 (10/07/2018)

பசுமைவழிச் சாலைக்கு முன் கவனிக்கவேண்டியவை! - அரசுக்குப் பாடம் சொல்லும் ஆய்வு முடிவுகள்

சேலம் - சென்னை வரையிலான எட்டு வழிச் சாலைக்காகப் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட இருக்கின்றன. `மரங்கள் செழிப்பாக இருந்தால் மனித சுகாதாரம் மேம்படும். 100 மரங்கள் இருந்தால், வருடத்துக்கு 53 டன் கரியமில வாயுவை நீக்கும் பணியைச் செய்கின்றன' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். 

பசுமை வழிச்சாலை

மேற்கு மண்டலத்தில் அமைய இருக்கும் எட்டு வழிச் சாலைக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும். சென்னையிலிருந்து சேலத்துக்கு மூன்றரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும். இதனால், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் சிக்கனம் ஏற்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அதேநேரம், இந்தத் திட்டத்தின்மூலம் விவசாயிகளின் நிலங்கள் பறிபோவதோடு, பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் எனச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவர்களின் எதிர்ப்பையும் மீறி, நில அளவைப் பணிகள் நடந்துவருகின்றன.

 இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தின் புகழேந்தி, “டெல்லியில் வீடுகளை உருவாக்குவதற்காக முழு வளர்ச்சியடைந்த 17,000 மரங்கள் வெட்டப்பட உள்ளன. வெட்டப்படும் ஒரு மரத்துக்கு பதில் 10 மரக்கன்றுகள் நடப்படும் என்பது அரசின் வாதம். ஆனால், அவை வளர்வதற்கு 20 வருடங்கள் ஆகும் என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. இந்த வீடுகளைக் கட்டப்போகும் தேசிய கட்டுமானக் கழகத்துக்கு இது தவறான வாதம் எனத் தெரிந்திருந்தும் அமைதியாக இருக்கின்றனர். டெல்லியில் காற்று மாசுபாடு மிக அதிகமாக உள்ள நிலையில், மரங்களின் பயன்பாட்டை அதிகாரிகள் அறியாமல் இருப்பது நியாயம்தானா எனத் தெரியவில்லை. அதேபோல, சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எழுத்து வடிவில் கொடுத்த அதிகாரபூர்வ தகவலின்படி, 6,400 மரங்கள் மட்டும் வெட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மூன்று முதல் நான்கு லட்சம் மரங்கள் அழிக்கப்படும் எனச் சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்தத் திட்டத்தின்படி மலைகளில் உள்ள மரங்கள் அழிவதை அரசு முறையாகக் கணக்கில் கொள்ளவில்லை என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. மேலும், சாலையிடும் பணிக்கு கட்டுமானப் பணியின்போது தேவையான தண்ணீரின் அளவு 11,20,000 கிலோ லிட்டர், 1,63,000 மெட்ரிக் டன் தார் தேவைப்படும்.

மரங்களின் பயன்குறித்து விரிவாக ஆய்வுசெய்திருக்கிறார், கொல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.எம்.தாஸ். அவரது ஆய்வின்படி, 50 வருடம் வாழும் ஒரு மரத்தின் பணமதிப்பு 2,00,000 டாலர். (இது 1979 பணமதிப்பு நிலவரப்படி) 
1.    மரம் மூலம் வெளியாகும் ஆக்சிஜனின் அளவு.
2.    அதன் பழங்கள் - அதன் மூலமான பண மதிப்பு.
3.    மரக்கிளைகளின் பயன்பாடு (பயோ மாஸ் உட்பட)
4.    மரத்தின் ஒரு கிராம் வளர்ச்சியின்போது 2.66 கிராம் ஆக்சிஜன் வெளியாகி நாம் நிம்மதியாகச் சுவாசிக்க உதவுகிறது. 

புகழேந்தி Dr.Nancy Beckham, Australia அவர்களின் “Trees finding their true value” என்ற ஆய்வுக் கட்டுரையில் ஓசையின்றி நாள்தோறும் மரங்களின் பல வருட செயல்பாடுகளின் உண்மை நிலவரம் வியக்கத்தக்க நிலையில் உள்ளது. அவை,
1.    மண்ணின் பலத்தை அதிகப்படுத்தி, அதைப் பாதுகாத்து மண் அரிப்பைத் தடுத்தல். 
2.    சத்துப் பொருள்களின் மறு சுழற்சி.
3.    காற்றைக் குளுமைப்படுத்துவது.
4.    காற்றின் வேகத்தை மாற்றியமைத்து கட்டுப்படுத்துவது. 
5.    மழை பெய்வதற்கான காரணியாகச் செயல்படுவது.
6.    மாசுகளை உள்வாங்கி அவற்றின் அளவைக் கட்டுப்படுத்துவது.
7.    மரப் பொருள்களின்மூலம் கிடைக்கும் எரிபொருள் சிக்கனம்.
8.    கழிவுநீர் வடிகட்டியாகச் செயல்படுவது.
9.    மரங்களின் இருப்பின்மூலம் ஓர் இடத்தின் பண மதிப்பைக் கூட்டுவது. 
10.    சுற்றுலாத்தளமாக உருவாகி, அதன்மூலம் கிடைக்கும் பண வருவாய். 
11.    மக்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது. 
12.    மன அழுத்தத்தைக் குறைத்து சுகாதாரத்தை மேம்படுத்துவது. (மிக சமீபத்தில் சூழல் ஆய்வு (Environmental Research/ Norwich Medical School) என்னும் ஆய்வுக் கட்டுரையில் 20 நாடுகளிலுள்ள 29 லட்சம் மக்களிடத்தில் செய்த பெரும் ஆய்வில், மரங்கள் இருக்கும் பசுமைச் சூழலில் வாழும் மக்களுக்கு சர்க்கரை நோய், இருதய நோய்கள், முன்கூட்டிய இறப்பு, குறைப் பிரசவம், மன அழுத்தம், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் மிகக் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. 
13.    உணவு மருந்தாகப் பயன்படுதல்.
14.    பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலம் கொடுத்தல் போன்றவை கிடைக்கப்பெறுவதாக ஆய்வில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. 

அதேபோல, அமெரிக்காவில் நடந்த ஆய்வில் (The Dept of Environmental Conservation of New York State, USA), 
 1.    மரங்கள் செழிப்பாக இருந்தால் மனித சுகாதாரம் நிச்சயம் மேம்படும். 
2.    100 மரங்கள், வருடத்துக்கு 53 டன் கரியமில வாயுவை நீக்குகிறது; 430 பவுண்டு காற்றின் மாசை நீக்குகிறது. 1.4 லட்சம் கேலன் (ஒரு கேலன் என்பது 3.8 லிட்டர்) மழை நீரைச் சேமிக்கிறது. 
3.    மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களில், மக்கள் அதிக மனநிறைவுடன் இருப்பதாகவும் சமூகப் பிரச்னைகள் அங்கு குறைந்து காணப்படுவதும் தெரியவந்துள்ளது. 
4.    சரியான இடங்களில் மரங்களை நட்டு, காற்றின் குளிர்ச்சியை உறுதிப்படுத்துவதன்மூலம் ஏ.சி பயன்பாட்டின் தேவை 56 சதவிகிதம் குறைந்து, பெருமளவில் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டெல்லி கிரீன் என்ற அமைப்பு, 2013-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், நன்கு வளர்ந்த ஒரு மரம், ஒரு வருடத்துக்கு ஆக்சிஜனை வெளியிடுவதன்மூலம் கிடைக்கும் பணமதிப்பு 24 லட்ச ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் சாலைகளை அமைக்கும்போது, மரங்களின் பயன்பாடுகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக முன்வைக்கிறோம்" என்றார் விரிவாக.