வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (10/07/2018)

`தமிழக லோக் ஆயுக்தா பயனற்றது’ - 10 காரணங்களைப் பட்டியலிடும் சமூக ஆர்வலர்கள்

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டம் பயனற்றது எனச் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் 10 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். 

லோக் ஆயுக்தா சட்டம்

1. முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் புகார்கள் லோக் ஆயுக்தாவால் விசாரிக்கப்பட்டு, போதிய ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கித் தரும்வரையான பணிகளை லோக் ஆயுக்தா செய்யாது. அதாவது, தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் விசாரணைப் பிரிவு (Inquiry Wing) மட்டுமே உள்ளது வழக்குத்தொடரும் பிரிவு (Prosecution Wing) கிடையாது. இப்போதுள்ள சட்டப்படி ( CHAPTER 6, பிரிவு 7(a)), லோக் ஆயுக்தாவின் விசாரணையில் அமைச்சர் ஊழல் செய்திருக்கிறார் என்று தெரியவந்தாலும், அதுகுறித்தான விசாரணை அறிக்கையை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கும் `பரிந்துரைப்’ பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும். முதலமைச்சர் மீதான விசாரணை அறிக்கையை (அவர் ஊழல் செய்திருக்கிறார் என்ற ஆதாரங்களோடு) ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். உயரதிகாரிகள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது அரசுக்கு (?) அனுப்பி வைக்கப்படும். இந்தப் பரிந்துரை அறிக்கை மீது ஆளுநரோ முதலமைச்சரோ அரசோ என்ன நடவடிக்கை எடுக்கும், எப்போது நடவடிக்கை எடுக்கும்? எடுக்காவிட்டால் லோக் ஆயுக்தா என்ன செய்யும் என்ற எந்தக் கேள்விக்கும் நம் சட்டத்தில் பதில் இல்லை. பக்கத்து மாநிலங்களான கர்நாடகா (Chapter 14), கேரளா (Chapter 15) மற்றும் சமீபத்தில் (2015) லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவந்த இமாசலப்பிரதேஷ் (4) போன்ற பல மாநிலங்களின் லோக் ஆயுக்தா சட்டத்தில் வழக்குத் தொடரும் பிரிவு உள்ளது. விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால், சிறப்பு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வாங்கித்தரும் வரையான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அம்மாநிலச் சட்டங்களில் வழிவகை உள்ளது. தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் இது இல்லை. ஊழல் புகார் மீது விரிவாக விசாரணை நடத்தி மேல் நடவடிக்கைக்காக `பரிந்துரை’ அனுப்பும் `பெரும்’ பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும்.

செந்தில் ஆறுமுகம்2.  மாநில அரசின் குறுக்கீடு அதிகமுள்ள “லஞ்ச ஒழிப்புத்துறையை” லோக் ஆயுக்தாவின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையை ஒழித்துவிட்டு, அதன் பணிகளை முழுமையாக “லோக் ஆயுக்தாவே”  செய்யும் என்று கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறையை லோக் ஆயுக்தாவுக்கு ஒரு இணையான துறையாக தொடர வழி செய்கிறது தமிழக லோக் ஆயுக்தா சட்டம். இது சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும்  போக்கில் உள்ளது.

3. உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்தங்கள், பணி நியமனங்கள், பணி மாற்றம் போன்ற லஞ்ச-ஊழல் நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களை லோக் ஆயுக்தா விசாரிக்காது என்பது ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் அப்பட்டமான முயற்சி. பலநூறு கோடிகள் ஊழல் நடைபெறும் பணிகளுக்கு விலக்களித்துவிட்டு சிலநூறு ரூபாய் லஞ்சம் வாங்கப்படும் சில்லறை பிரச்னைகளை மட்டும்தான் லோக் ஆயுக்தா விசாரிக்குமா ?

4. ஊழல் புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர்களை பதவி விலகச் சொல்லிப் பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்து முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் லோக் ஆயுக்தா சட்டத்தில் விலக்கு : (  தமிழக லோக் ஆயுக்தா சட்டம் 2018, பிரிவு 26 ) - முதலமைச்சர், அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் புகாரானது விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அப்புகாரில் முகாந்திரம் உள்ளது என்று லோக் ஆயுக்தா கருதுமானால் அந்த முதல்வரையோ அமைச்சரையோ பதவியிலிருந்து விலகச் சொல்லி பரிந்துரை அளிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு அளிக்கப்படாதது ஏன்..? யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா பரிந்துரைக்கலாம் என்ற பட்டியலிலிருந்து முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் விலக்கு கொடுக்கப்பட்டது ஏன்? (அரசு ஊழியர்களின் மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருந்தால் அவர்களைத் தற்காலிக பணிநீக்கம், இடமாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்கு லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உள்ளது). கர்நாடக லோக் ஆயுக்தா சட்டத்தில் முதல்வர், அமைச்சர்களைப் பதவி விலகச் சொல்லப் பரிந்துரைக்கும் சட்டப் பிரிவு (பிரிவு 13) உள்ளது.
5. பொய்ப் புகார் மீது 1 இலட்சம் அபராதம் ஓராண்டு சிறை:  ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டால், லஞ்ச - ஊழல் புகார் கொடுக்கும் தனிநபர்கள், பொதுநல அமைப்புகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறது தமிழக லோக் ஆயுக்தா சட்டம்.

6. லோக் ஆயுக்தா செயலாளர் நியமனம் : அரசாங்கம் தரும் பட்டியலிலிருந்துதான் லோக் ஆயுக்தாவின் செயலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது லோக் ஆயுக்தாவின் தன்னாட்சியைத் தட்டிப்பறிக்கும் செயல்.
7. லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்கள்: எப்போது நியமிக்கப்படுவார்கள் என்பதற்கு சட்டத்தில் காலக்கெடு எதுவும் விதிக்கப்படாததால் லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்க அரசுக்கு வாய்ப்பாக அமையும். இந்நியமனங்களுக்கு காலவரையறை செய்யப்பட வேண்டும்.
8. Suo Motu அதிகாரம்: தானே முன்வந்து இலஞ்ச-ஊழல் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது ( suo Motu), அமைச்சர்கள், உயரதிகாரிகள் வீட்டில் திடீர் சோதனை செய்வது (ரெய்டு) போன்ற அவசியமான அதிகாரங்கள் குறித்த விவரங்கள் சட்டத்தில் இல்லை. 
9.  சொத்துவிவரம் தாக்கல்: முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களைக் குறிப்பிட்டதொரு காலகட்டத்துக்கு ஒரு முறை (எ.கா: ஆண்டுக்கு ஒருமுறை) தாக்கல் செய்ய வேண்டும் என்ற பிரிவு, பல மாநிலங்களில் உள்ளது. தமிழகச் சட்டத்தில் இது இல்லை.
10.  சேவை குறைபாடு  குறித்து: பல மாநிலங்களில் (ஆந்திரா, கர்நாடகா) லோக் ஆயுக்தாவானது அரசு தரும் சேவைகளில் ( குடிநீர், மின்சார இணைப்பு...பிற) ஏற்படும் குறைபாடுகள் குறித்து விசாரிக்கும் ஆணையமாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் இப்பிரிவே இல்லை.