வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (10/07/2018)

கடைசி தொடர்பு:19:40 (10/07/2018)

ராக்கெட் ராஜா மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர் நீதிமன்றம் உத்தரவு

ராக்கெட் ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ததை ரத்துசெய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராக்கெட் ராஜா

நெல்லையைச் சேர்ந்த ராஜா என்ற ராக்கெட் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "சென்னை தேனாம்பேட்டை போலீஸார், மே 9-ம் தேதி என்னைக் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்ததை எனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், என்னை கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு மாற்றம்செய்தனர். இந்த நிலையில், ஜூன் 9-ம் தேதி, என்மீது குண்டாஸ் வழக்கு பதிந்தனர். முறையாக ஆவணங்கள் இன்றி, விதிமுறைகளைப் பின்பற்றாமல் என்மீது குண்டாஸ் வழக்குப் பதிந்து, நெல்லை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குண்டாஸ் வழக்குப் பதிவு தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. முறையாக விதிமுறைகளைப் பின்பற்றாமல் என்மீது பதிவுசெய்யப்பட்ட குண்டாஸ் உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராக்கெட் ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ததை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.