`என்னை மட்டுமல்ல... ஓட்டேரி லதா, சசிகலாவையும் ஏமாற்றினார்' - பவர் ஸ்டார் மீது பகீர் புகார் | Cheating allegation raised against power star seenivasan

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (10/07/2018)

`என்னை மட்டுமல்ல... ஓட்டேரி லதா, சசிகலாவையும் ஏமாற்றினார்' - பவர் ஸ்டார் மீது பகீர் புகார்

பவர் ஸ்டார் சீனிவாசன்

``என்னை மட்டுமல்ல, ஓட்டேரி லதா, விஜயா, சசிகலா உட்பட சிலரை  நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஏமாற்றிவிட்டார்'' என்று தயாநிதி என்பவர் புதுவண்ணாரப்பேட்டை போலீஸிடம் புகார் கொடுத்துள்ளார். 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, அன்னை இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தயாநிதி, டிரைவராக வேலைபார்த்துவருகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு, தி.நகரைச் சேர்ந்த பவர் ஸ்டார் சீனிவாசனைச் சந்தித்துள்ளார். அப்போது, குறைந்த வட்டியில் 30,00,000 ரூபாய் லோன் வாங்கித் தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதன்பேரில் தயாநிதி, கமிஷன் தொகையாக ரூ.4,16,000ம் கொடுத்துள்ளார். ஆனால், லோன் வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும், லோன் தொகை ரூ.30,00,000-க்கான செக்கையும் வேறு ஒருவரின் பெயரில் நடிகர் சீனிவாசன் கொடுத்து ஏமாற்றியுள்ளார். அதன்பேரில்,  நடிகர் சீனிவாசன் மீது மோசடி வழக்கு பதிவுசெய்துள்ளோம். 

தயாநிதி கொடுத்த புகாரில் என்னை மட்டுமல்லாமல், ஓட்டேரி லதா மற்றும் சுசிலா, விஜயா, சசிகலா, கருணாகரன், லட்சுமி, சுமதி ஆகியோரிடமும் லோன் வாங்கித் தருவதாகக் கூறி 15,00,000-த்துக்கு மேல் ஏமாற்றியுள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்றனர்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது, புதியதாக மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.