`நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு வேண்டும்’ - செங்கோட்டையன் கோரிக்கை

``நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
 

செங்கோட்டையன்

திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளி ஆய்வகக் கட்டடத்தையும் திருச்சியில் இயங்கிவரும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனம் சார்பில் திறக்கப்படும் ஆய்வகம் மற்றும் நடமாடும் அறிவியல் பரிசோதனைக் கூடம் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி-க்கள் ப.குமார், ரத்தினவேலு, எம்.எல்.ஏ-க்கள் முசிறி செல்வராஜ், மணப்பாறை சந்திரசேகர் மற்றும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கோபி நடராஜன் ஆகியோர் சகிதமாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ``தமிழக பள்ளி கல்வித்துறை நாட்டிலேயே முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பின்பற்றுகின்றன. அந்தளவுக்கு நமது அரசாங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. பள்ளியில் படிக்கும்போதே மாணவ-மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ பாடத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அந்த மாற்றம் வரலாற்றைப் படைக்கிற மாற்றமாக அமையும். 12 பாடங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, திறன் மேம்பாட்டுப் பயிற்சி எனப்படும் 12 புதிய பாடத் திட்டங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 500 இடங்களில் சிஏ பயிற்சி அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணக்கு தணிக்கையியல் எனப்படும் சி.ஏ பாடத்துக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் அதிக அளவு பயன் பெறுவார்கள். இந்தியா முழுவதும் 80 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்றனர். தமிழகத்தில் 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடத்துவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். இதுவே தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்படும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு வசதியாக 422 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!