வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (10/07/2018)

கடைசி தொடர்பு:19:27 (10/07/2018)

கல்லா கட்டிய மாஃபியாக்கள்... அரசு இழந்த பல கோடி ரூபாய் வருவாய்!

கல்லா கட்டிய மாஃபியாக்கள்... அரசு இழந்த பல கோடி ரூபாய் வருவாய்!

``மாநிலத்தின் வருவாயைப் பெருக்க அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தும்” என்று 2003-ம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா கம்பீரமாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் மணல் விலை குறையும்; மணல் தட்டுப்பாடு இருக்காது; மணலைவைத்து சாம்ராஜ்யம் நடத்திய மணல்குவாரி அதிபர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நினைப்பில் சாதாரண பொதுஜனம் இந்த அறிவிப்பைக் கண்டு அகமகிழ்ந்தனர். 

எவையெல்லாம் தங்களுக்குச் சாதகமாக நடக்கும் என்று பொதுமக்கள் நினைத்தார்களோ அதற்கு மாறாகவே அரசு ஏற்று நடத்திய மணல்குவாரிகளின் செயல்பாடுகள் இருந்தன. மணல் விலை உச்சத்துக்குச் சென்றது முதல் அரசு மணல் குவாரிகளை ஏற்று நடத்தியவர் பலரும் கோடிகளை வைத்து கோட்டை கட்டியது வரை உள்ள கதையெல்லாம் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகம் பார்த்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இருக்கிற பல ஆறுகளும் வண்டலை இழந்து வற்றிப்போய் இருப்பதற்கு இந்த மணல் மாஃபியாக்களின் பங்கு மகத்தானது. சரி, ஆற்றில் உள்ள மணலை எல்லாம் அள்ளி விற்ற பணம் அரசுக்கு வந்ததா என்றால், அதுவும் இல்லை என்ற உண்மை இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுபற்றி, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்காய்வுத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மணல் குவாரி மாஃபியா

மாநிலத்தில் உள்ள மணல்குவாரிகளைப் பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இயக்கிவருகிறது. சூழலியல் கேடு விளைவிக்காமலும் நிலத்தடிநீர் மட்டம் குறைவதைத் தவிர்த்தும் மணல் அள்ள வேண்டும் என்று விதிமுறை உருவாக்கப்பட்டது. முதலில் ஒரு லாரிக்கு இரண்டு யூனிட் மணலை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, 2008-ம் ஆண்டு மூன்று யூனிட் மணல் ஒரு லாரியில் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், மணல் கடத்தலைத் தடுக்க வருவாய், புவியியல் மற்றும் சுரங்கம், காவல், பொதுப்பணி, வனத்துறையின் அலுவலர்களைக் கொண்ட வட்ட, மாவட்ட, மாநில அளவிலான குழுக்களை அரசு அமைத்துள்ளது. இத்தனை துறைகளைக்கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டும் மணல் கடத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்றே வந்துள்ளது. 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ.302.55 கோடி மதிப்புள்ள 36.11 லாரி லோடு மணல் கொண்டு சென்ற 16,178 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

50 ஹெக்டேருக்குக் குறைவான நிலப்பகுதிகளுக்கு மாநிலச் சுற்றுச்சூழல் அனுமதியும் அதற்கு மேற்பட்ட அளவில் மணல் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தமிழகத்தில் அமைக்கப்பட்ட குவாரிகளில் பெரும்பாலானவை மாநிலச் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடுமே இயக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஒவ்வொரு குவாரிக்கும் இரண்டு பொக்லைன் இயந்திரங்களை மிகாமல் பயன்படுத்தவும் காலை 6 மணிக்கு முன்பும் இரவு 7 மணிக்குப் பிறகும் மணல் அள்ளக் கூடாது என்ற விதியும் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பாயும் வெள்ளாற்றில் 19 ஹெக்டேரில் அமைக்கப்பட்ட மணல் குவாரிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். ஒரு மீட்டர் ஆழத்துக்கு மிகாமல் மணல் எடுக்கலாம் என்ற ஒப்புதலோடு இந்தக் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை இந்த ஆற்றில் அமைக்கப்பட்ட குவாரிகளில் ஏழு பொக்லைன் இயந்திரங்கள் மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலான ஆழத்துக்கும் மணல் அள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 19 ஹெக்டேருக்கு மணல் அள்ள அனுமதி பெறப்பட்டு நெய்வாசல் கிராமத்தில் அமைக்கப்பட்ட குவாரியில் 42.37 ஹெக்டேரிலும், சன்னாசிநல்லூரில் அமைக்கப்பட்ட குவாரியில் 26.44 ஹெக்டேரிலும் மணல் அள்ளப்பட்டுள்ளது. இதை UAV ஆய்வு மூலம் தணிக்கைத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேபோல், 2016-ம் ஆண்டுவரை தமிழகத்தில் செயல்பட்ட 62 குவாரிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பொதுப்பணித் துறையினர், குவாரிகளில் ஒரு யூனிட்க்கு ரூ.520 பெற்று மணல் சேமிப்பு மையத்தில் அதை ரூ.1,650-க்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், சேமிப்பு மையத்தின் கணக்கை ஆராய்ந்தால் மணலைக் கூடுதல் விலைக்கு விற்றுள்ளதை அறிய முடிகிறது. அதேபோல், லாரிகளும் மோசடியாகப் பதிவுசெய்து மணல் அள்ளும் வேலையில் ஈடுபட்டன. 

Indian audit and accounts service

உதாரணமாக, நெய்வாசல், பெண்ணாடம், எடைச்செறுவாய், வசிஷ்டபுரம், மாயனுார் ஆகிய ஐந்து குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு 55,485 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இதில் வெறும் 7,429 சீட்டுகளுக்கு மட்டுமே உதவிப் பொறியாளரால் உரிமைச் சான்று அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனுமதிச் சீட்டுகள் உதவி செயற்பொறியாளர்களின்கீழ் பணிபுரிபவர்களால் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு குறைபாடு ஆகும். சட்டவிரோதமாக மணல் கடத்திச் செல்வதைத் தடுக்க முப்பரிமாண முத்திரைகள் பதிக்க இந்திய அரசு அறிவுரை வழங்கியது. ஆனால், மேற்கண்ட ஐந்து குவாரிகளில் மூன்று ஆண்டுகளில் 1,05,158  அனுமதிச் சீட்டுகளில் முப்பரிமாண முத்திரைகள் இடம்பெறவில்லை.  

தமிழகத்தில் அமைக்கப்பட்ட மணல்குவாரிகளில் போதிய புவி அச்சுக் குறியீடுகளை உறுதி செய்யாமல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டி மணல் அள்ள அனுமதித்தது அரசின் தவறாகும். குவாரிகளை முறையாக நடத்தாமல் கூடுதல் அளவில் மணல் எடுத்து, அதை முறையற்று விநியோகம் செய்தவகையில் அரசுக்கு ரூ.21.02 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், மக்களுக்கு நியாயமான விலையில் மணல் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். 


டிரெண்டிங் @ விகடன்