வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:21:00 (10/07/2018)

உச்சிப்புளி அருகே கடற்கரையில் மூட்டை மூட்டையாகக் கிடந்த கடல் அட்டைகள் பறிமுதல்!

 உச்சிப்புளி கடற்கரைப் பகுதியில் சாக்கு மூடைகளில் கிடந்த 250 கிலோ கடல் அட்டைகளை மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் கைப்பற்றி, வன உயிரினப் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

உச்சிப்புளி அருகே கைபற்றப்பட்ட கடல் அட்டை மூட்டைகள்
  https://www.vikatan.com/news/tamilnadu/98620-300-kg-sea-cucumber-seized-by-coastal-police-at-rameswaram.htmlமண்டபம், வேதாளை , உச்சிப்புளி கடலோரப் பகுதிகளிலிருந்து அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்குக் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. இவ்வாறு கடத்தப்படும் கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்கள் அவ்வப்போது கைப்பற்றிவருகின்றனர். இவ்வாறு கைப்பற்றப்படும் கடல் அட்டைகள் உயிருடன் இருந்தால், அவற்றை மீண்டும் கடலிலேயே விட்டுவிடுகின்றனர். 
 இந்நிலையில், உச்சிப்புளி அருகே உள்ள தோப்புவலசை கடற்கரைப் பகுதியில், மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது, கடற்கரையோரம் ஏராளமான மூட்டைகள் வைத்திருந்ததைக் கண்டனர். அந்த மூட்டைகளை போலீஸார் சோதனையிட்டபோது, அவற்றில் கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. ஏராளமான மூட்டைகளில் இருந்த சுமார் 250 கிலோ கடல் அட்டைகளைக் கைபற்றிய போலீஸார், அவற்றை மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
  நேற்று, இதேபோன்று மண்டபம் கடற்கரையில் நாட்டுப்படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  300 கிலோ கடல் அட்டை கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், இன்று கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளைப் பதுக்கிவைத்திருந்தவர்கள் குறித்து மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர் சதீஷ் விசாரணை நடத்திவருகிறார்.