கொசுக்கடியால் சித்ரவதை: நீதிபதியிடம் சட்டையைக் கழற்றிக் காட்டிய முகிலன்!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில், அணுஉலை எதிர்ப்பாளரான முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தன்னை மதுரை சிறையில் கொசுக்கடிக்கு உள்ளாக்கி சித்ரவதை செய்வதாக நீதிபதியிடம் முறையிட்டார். தனது சட்டையைக் கழற்றி, கொசுக்கடியால் ஏற்பட்ட தடிப்புகளைக் காண்பித்தார். 

முகிலன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகத் தொடரப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட முகிலன், இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதியிடம் தன்னை மதுரை சிறையில் கைவிடப்பட்ட பகுதியில் அடைத்துவைத்திருப்பதாகப் புகார் தெரிவித்தார். அத்துடன், அந்த அறையில் கொசுக்கள் நிறைந்திருப்பதால், உடல் முழுவதும் கொசு கடித்து உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டிருப்பதைக் காண்பித்தார். அத்துடன் சட்டை, பனியன் ரத்தமாக இருப்பதையும் காட்டினார். 

மதுரை சிறையில், கொசுத் தொல்லையால் ஒரு மணி நேரம்கூட தூங்க முடியவில்லை என்றும், கொசுக்கடியால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வந்துவிடுமோ என அஞ்சுவதாகவும் தெரிவித்தார். முகிலனை மதுரைக்கு மாற்றியது ஏன் என வள்ளியூர் துணை கண்காணிப்பாளரிடம் நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார். அத்துடன், அவரை மதுரை சிறையில் வேறு சுகாதாரமான அறைக்கு மாற்றவும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 24-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 

நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த முகிலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’நான் என்ன குற்றம் செய்தேன், கடந்த 10 மாதமாக சிறையில் இருக்கிறேன். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ’நிர்வாகக் காரணம்’ என்ற பெயரில் என்னை மதுரை சிறைக்கு மாற்றினார்கள். அங்கே கொசுத்தொல்லை காரணமாக, கடந்த 10 நாளில் இரவு 1 மணி நேரம்கூட நிம்மதியாகத் தூங்கியதில்லை. 

கொசுக்கடி

இதற்கு முன்பு, பலமுறை அரசு என்னைக் கொல்ல முயன்றுள்ளது. இப்போது, சிறைக்குள் எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படவைத்துக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறது. என்னை சொந்த ஜாமீனில் செல்ல அனுமதிப்பதாகக் கூறிய வள்ளியூர் நீதிபதி, இப்போது அடுத்த விசாரணையின்போது சொல்வதாகத் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி காவல்துறையினர், என்மீது தேசத் துரோக வழக்கு போட்டிருக்கிறார்கள். அடுத்ததாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் என்னைக் கைதுசெய்யும் வேலைகளையும் அரசு செய்கிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவருகிறது. தமிழகத்தில் எதிர்த்துப் பேசினாலே சிறைவாசம், துப்பாக்கிச் சூடு என இந்த அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது. மக்களின் வாழ்வாதாரம் பற்றி துளியளவும் கவலைப்படாமல், நாசகாரத் திட்டங்களைக் கொண்டுவருவதில் தமிழக அரசு ஆர்வம்காட்டுவது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!