வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (10/07/2018)

நெல்லை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ்!

நெல்லை தென்னிந்திய திருச்சபை மாம்பழம் சங்கம் மற்றும் 238வது தோத்திர வருடாந்திரப் பண்டிகை திருவிழாவுக்கு அனுமதி மறுத்தது தொடர்பான வழக்கில் நெல்லை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபை நிர்வாகக் குழுச் செயலர் காந்தையா நல்லபாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார் அதில் " நெல்லை தென்னிந்திய திருச்சபையின் மாம்பழம் சங்கம் மற்றும் 238வது தோத்திர வருடாந்திரப் பண்டிகை திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த திருவிழாவிற்கு கடந்தாண்டு ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, இந்தாண்டு திருவிழாவிற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். திருவிழாவிற்கு அனுமதி கோரி நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்த நிலையில், அனுமதி தர மறுத்துவிட்டனர். மேலும் திருவிழாற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருவிழாற்கு அனுமதியளிக்க கூடாது என கூறும் எதிர்த்தரப்பினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் தென்னிந்தியத் திருச்சபை மாம்பழம் சங்கம் மற்றும் 238வது தோத்திர வருடாந்திர  பண்டிகைத் திருவிழாற்கு நெல்லை மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே நெல்லை தென்னிந்திய திருச்சபை மாம்பழம் சங்கம் மற்றும் 238 வது தோதாத்திர வருடாந்திர பண்டிகை திருவிழாற்கு அனுமதி மறுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து நெல்லை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.