வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:01:00 (11/07/2018)

"சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடணும்!" - கோரிக்கை வைக்கும் மக்கள்!

சமுதாயக் கூடம்
 

அதிக மக்கள்தொகை கொண்ட பேரூராட்சியில், மக்கள் தங்கள் இல்ல விசேஷங்கள் நடத்த இந்த சமுதாயக்கூடத்தைத் திறந்துவிடணும்" என்று பள்ளப்பட்டி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.


 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது பள்ளப்பட்டி பேரூராட்சி. சுமார் ஐம்பதாயிரம் மக்கள்தொகை கொண்ட இந்தப் பேரூராட்சி, தமிழகத்தில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் ஒன்று. இங்கு, இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். பள்ளப்பட்டி பேரூராட்சியில், 2008-ம் ஆண்டு கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த கே.சி.பழனிச்சாமியால், உள்ளூர் வளர்ச்சி நிதியில் பேரூராட்சியை ஒட்டி அதிக பரப்பளவுடன்கூடிய சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், அதிகாரிகள் தடுத்துவருவதாக மக்கள் புலம்பிவருகிறார்கள். 'இந்த சமுதாயக்கூடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வாடகை வசூலித்தால், பேரூராட்சிக்கும் வருமானமாக இருக்கும்; பொதுமக்களும் பயன்பெறுவார்கள்' என்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர் ஒருவர், "பள்ளப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்களின் குடும்ப நிகழ்ச்சிகளான பெயர் வைக்கும் நிகழ்ச்சி, உறுதி பேசும் நிகழ்ச்சி எனப் பல நிகழ்ச்சிகளுக்கும் சிறந்த  இடமாக இந்த சமுதாயக்கூடம் அமைந்துள்ளது. அதனால்,பேரூராட்சி மக்களின் பயன்பாட்டுக்கு இந்த சமுதாயக்கூடத்தைக் குறைந்த வாடகையில் விடலாம்.  பேரூராட்சியே கட்டணம் வசூலிப்பதால், வாடகையும் குறைவாக இருக்கும். இங்கு வசிக்கும் 70 சதவிகித ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களும் தங்கள் வீட்டு  சுப நிகழ்ச்சிகளை நடத்திப் பயன்பெறுவார்கள். இந்தக் கோரிக்கையை பள்ளப்பட்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வைத்துவிட்டோம். யாரும் செவிசாய்க்கலை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்" என்றார்கள்.