வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:23:00 (10/07/2018)

சேதமடைந்த சாலையால் அவதிப்படும் மக்கள்! சீரமைக்கக் கோரிக்கை

விருத்தாசலம் அருகே அரசக்குழி - குமாரமங்கலம் இடையே உள்ள இணைப்புச் சாலை மிக முக்கிய சாலையாகும். இந்தச் சாலை, கடலூர் - விருத்தாசலம், விருத்தாசலம் - சிதம்பரம் ஆகிய சாலைகளுக்கு இடையே இணைப்புச் சாலையாகப் பயன்பட்டுவருகிறது. இந்தச் சாலை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அது சரிவர சீரமைக்கப்படாமல் மீண்டும் பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் இருந்தது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து, பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

சாலை

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பொக்கலைன் இயந்திரம்மூலம் பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு, புதிய சாலை பணி தொடக்கப்பட்டது. பின்னர், பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் கற்கள் பெயர்ந்துள்ளதால்,  சைக்களில் மற்றும் பைக்கில் செல்பவர்கள்  அடிக்கடி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுவருகிறது. தினமும் இந்தச் சாலை வழியே செல்லும் பள்ளி வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கிராம மக்களின் நலன் கருதி, சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.