தாணுமாலைய சுவாமி கோயில் வளாகத்தினுள் உள்ள கடைகளின் பொது ஏலத்துக்கு இடைக்காலத் தடை!

 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி கோயில் வளாகத்தினுள் உள்ள கடைகளின் பொது ஏலத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அருள்மிகு பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோயில், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி கோயில் ஆகியன உள்ளன. இந்தக் கோயில்களில், நடமாடும் சிறு வியாபாரிகளிடம் கட்டணம் வசூல் செய்தல், பிரசாத விற்பனை செய்யும் உரிமம், பூமாலை மற்றும் பன்னீர் விற்பனைசெய்யும் உரிமம், தேங்காய், பழம் மற்றும் பூஜைப் பொருள்கள் விற்பனைசெய்யும் உரிமம் ஆகியவற்றுக்கு பொது ஏலம் நடத்த ஜூன் 26-ம் தேதி, கோயில் இணை ஆணையர் அரசாணை வெளியிட்டார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் அலுவலகத்தில், ஜூலை 11-ம் தேதி பொது ஏலம் நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதில், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி கோயிலில் ஏலம் விடப்படும் கடைகள், கோயில் வளாகத்தினுள் இருக்கின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியால், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் உள்ள கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அரசாணை வெளியிடப்பட்டது.  கோயில் கடைகள் பொது ஏலத்துக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, இன்று நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தாணுமாலையசுவாமி கோயில் வளாகத்தினுள் உள்ள கடைகளின் பொதுஏலத்துக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!