காஞ்சிபுரத்தில் பசுமைச்சாலைக்கு நிலம் அளவிடும் பணி தொடக்கம்! - போலீஸ் குவிப்பு

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை சுமார் 277 கி.மீ தொலைவுக்கு 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது.

பசுமைச் சாலை

காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்தரமேரூர் ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள 42 கிராமங்கள் வழியாக 59 கி.மீ தொலைவுக்கு இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வரை பறக்கும் சாலையாகவும், மண்ணிவாக்கத்திலிருந்து தரைவழியாகவும் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இடையிடையே பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தில் தொடங்கும் 8 வழிச் சாலை கரசங்கால், படப்பை, பாலூர், குருவன்மேடு, அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தை அடைகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த உள்ளன.  

பசுமைச் சாலை, காஞ்சிபுரம்

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா துண்டல்கழனி பகுதியிலிருந்து நிலத்தை சர்வே செய்யும் பணியை இன்று தொடங்கினர். இதுபோன்று ஒரகடம் அருகே வளையகரணை உள்ளிட்ட பகுதிகளிலும் நிலஅளவீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஒரு சில இடங்களில் அளவீடு செய்யும்போது அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. சுமார் 10 கி.மீ தூரம் நிலம் அளக்கும் பணி நிறைவடைந்திருக்கிறது. நாளை, செங்கல்பட்டு பகுதியில் உள்ள 8 கி.மீ தொலைவை அதிகாரிகள் அளக்கத் திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நிலஅளவை செய்யும்போது பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால், உத்தரமேரூர் பகுதியில் விவசாய நிலங்கள் அதிக அளவில் இருப்பதால், பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!