தூத்துக்குடியில் பயன்படுத்தப்பட்ட 17 துப்பாக்கிகள், 157 தோட்டா உறைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார், இரண்டாவது நாளாக இன்று துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட 17 துப்பாக்கிகள் மற்றும் ஆய்வில் சேகரிக்கப்பட்ட 157 தோட்டா  உறைகள் ஆகியவற்றை கோவில்பட்டி ஜே.எம்-1 நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த மே22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் அரசு வாகனங்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவை  தீ வைத்து எரிக்கப்பட்டன. 

இக்கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பான 5 முக்கிய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி.,  ஏ.டி.எஸ்.பி., மாரிராஜன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் உள்ளிட்ட 100 பேர் கொண்ட குழுவினர், விசாரணை மற்றும் ஆய்வுப்பணியை கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கினர்.

இக்குழுவினர் 10 பிரிவுகளாகப் பிரிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, இந்திய உணவுக் கழக அலுவலகம் முன் பகுதி, அண்ணாநகர் மெயின்ரோடு, திரேஸ்புரம், அரசு மருத்துவமனை  வளாகம், பாளையங்கோட்டை சாலை உள்ளிட்ட பல இடங்களில் விசாரணை மற்றும் ஆய்வை மேற்கொண்டனர். சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளுடன் வெடிகுண்டு மற்றும் தடய அறிவியல் நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் ரத்தக் கறை படிந்த உடைகள், அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள் ஆகியவற்றை கோவில்பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 1-ம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க, கடந்த 6-ம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வந்தனர். ஆனால், அன்று நீதிமன்றத் தலைமை எழுத்தர் பணியில் இல்லாததால், போலீஸார் திரும்பச் சென்றனர். இந்நிலையில், நேற்று (09.07.18) தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி., ஆய்வாளர் உலகராணி தலைமையிலான போலீஸார் குழுவினர் பலத்த பாதுகாப்புடன் கோவில்பட்டி ஜே.எம்-1 நீதிமன்றத்தில், துப்பக்கிச் சூட்டில்  உயிரிழந்தோரின் ரத்தக்கறை படிந்த உடைகள், அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டக்கள் ஆகியவற்றைத் தனித்தனி அட்டைப்பெட்டிகளில்  எடுத்துவந்து, நீதிபதி சங்கர் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இரண்டாவது நாளாக இன்று (10.7.18), துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட பிஸ்டல், எஸ்.எல்.ஆர்  ரக துப்பாக்கி, 303 ரைபிள் மற்றும் கார்பைன்  ரக, 17 துப்பாக்கிகள் மற்றும் ஆய்வில் சேகரிக்கப்பட்ட 157 தோட்டா உறைகள் ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!